பல வருடங்களாக தொடர்ந்து சர்ச்சையில் இருந்து வந்த நாடாளுமன்ற வளாக உணவகங்களின் மானியம் மத்திய அரசால் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஒவ்வொரு வருடமும் 8 கோடி ரூபாய் செலவு மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாப்பாட்டுக்கு முன்பை விட அதிகம் செலவிட வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பல்வேறு உணவகங்களில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. குறிப்பாக முழு சாப்பாடு 25 ரூபாய்தான் என்கிற அளவிலும் நொறுக்கு தீனி அல்லது தேனீர் போன்ற பொருட்களுக்கு சொற்பத் தொகையே செலவாகும் என்ற நிலை ஒரு சமயத்தில் இருந்து வந்தது.
நாடாளுமன்ற வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்; பாதுகாப்பு படை வீரர்கள்; நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பல்வேறு பணிகளுக்காக சென்று வரும் அரசு ஊழியர்கள் போன்றவர்களுக்கும் சலுகை விலையில் உணவு கிடைத்து வந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை, முதியவர்கள் ஆரோக்கியமான, கொழுப்பில்லாத உணவை அளவாக உட்கொள்ளும் நிலையில், பெரும்பாலும் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை விரும்புகிறார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உணவருந்தினாலும், வேகவைத்த காய்கறிகள் அல்லது சூப் போன்ற உணவுகளை உட்கொள்கிறார்கள். நாடாளுமன்ற உணவகங்கள் மலிவாக இருந்தாலும், சுகாதாரமாக இல்லை என்கிற புகாரும் உண்டு.
ஆனால் மக்கள் மத்தியில் மலிவு விலை மட்டுமே பேசப்படுவதால், மானியத்தை நீக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேநீரோ அல்லது காபியோ குடித்தால் ஒரு சில ரூபாய்கள் மட்டுமே செலவாகும் நிலையும் சமோசா அல்லது வடை போன்ற நொறுக்குத் தீனிகள் கிட்டத்தட்ட ஐந்து ரூபாய் என்கிற அளவிலும் இருந்து வந்த காலங்களில், எதற்காக நாடாளுமன்ற சவாலாக உணவுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்து வந்தது? குறிப்பாக நாடாளுமன்றத்திலே பல்வேறு அரசியல் பிரச்சினைகள் காரணமாக கூச்சல் குழப்பம் ஏற்பட்டு தொடர் முடக்கம் நடைபெறும்போது, இதனால் நாடாளுமன்றத்தை நடத்த செலவிடப்படும் பணம் வீணாகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுவந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ஏன் குறைந்த விலையில் உணவு அளிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்து கொண்டிருந்தது. ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு தங்குவதற்கான வீடு அளிக்கிறது, கூடவே அவர்களுக்கு பயணத்திற்கான செலவுகள், மின்சாரத்திற்கான செலவுகள், தொலைத்தொடர்பு கான செலவுகள் போன்ற பல்வேறு செலவுகளையும் அரசே ஏற்கிறது. நாடாளுமன்ற வளாகத்தில் குறைந்த விலையில் உணவு தேவைதானா என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்து வந்ததை அடுத்து தற்போது நாடாளுமன்ற உணவகத்தில் மானியத்தை முழுவதுமாக ஒழிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிறப்பித்துள்ளார்.
ஆகவே பட்ஜெட் கூட்டத் தொடருக்காக வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றம் கூடும்போது நாடாளுமன்ற உணவகங்களில் முன்பு இருந்த விலை கிடையாது. அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு ரயில்வே கேன்டீனை சேர்ந்தவர்கள், நாடாளுமன்ற வளாகத்திலுள்ள உணவகங்களை நடத்தி வந்த நிலை மாறி அதற்கு பதிலாக மத்திய அரசு நிறுவனமான "இந்தியா டூரிசம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்" நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் டெல்லியிலுள்ள அசோக் ஹோட்டல், சாம்ராட் ஹோட்டல் போன்ற பல்வேறு நட்சத்திர தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறது.
மக்களவையில் மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தகவல்படி இனி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்களில் ஒரு சமோசாவின் விலை 10 ரூபாயாக இருக்கும். ஒரு தோசையின் விலை 50 ரூபாய்; இரண்டு இட்லி களின் விலை 25 ரூபாய்;
மதிய உணவு சைவமாக (veg Buffet)அருந்த வேண்டும் என்றால் 500 ரூபாய் என்றும் அசைவ உணவு வேண்டும் (Non-veg Buffet) என்றால் 700 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு 65 ரூபாய்க்கு கிடைத்துக் கொண்டிருந்த மட்டன் பிரியாணியின் விலை தற்போது 150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல சிக்கன் பிரியாணி யின் விலை 100 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தக்காளி சாதத்தின் விலை 50 ரூபாய்; எலுமிச்சை சாதத்தின் விலை 30 ரூபாய் என்று பல்வேறு விதமான உணவுப் பொருட்களுக்கும் உயர்த்தப்பட்ட விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது
ஒருபக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், நாடாளுமன்ற வளாகத்திலேயே பணி புரியும் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஊழியர்கள்; பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் இந்த விலை உயர்வு குறித்து வருத்தத்துடன் உள்ளார்கள். ஒருபுறம் விலை உயர்வு என்றாலும் மற்றொருபுறம், ITDC மூலம் தரமான உணவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆகவே நாடாளுமன்றத்திலே புதிய விலைப்பட்டியல் மற்றும் புதிய உணவுப் பொருட்களின் பட்டியலுக்கும் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது போகப்போக தெரியும்.
-புதுடெல்லியிலிருந்து கணபதி