வணிகம்

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வைத்துள்ள ஜோகோவிச்!

EllusamyKarthik

கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வரும் நிறுவனம் ஒன்றில் அதிகளவிலான பங்குகளை தன்வசம் வைத்துள்ளார் டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரரான ஜோகோவிச். இதனை தடுப்பு மருந்தை தயாரித்து வரும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இவான் லோன்கரேவிக் உறுதி செய்துள்ளார். 

அந்நிறுவனத்தில் சுமார் 80 சதவிகிதம் பங்குகளை ஜோகோவிச் பெயரிலும், அவரது மனைவி ஜெலினா பெயரிலும் இருப்பதாக AFP செய்தி நிறுவன முகமைக்கு இவான் தெரிவித்துள்ளார். QuantBioRes என்ற டென்மார்க் நாட்டு நிறுவனத்தில் இந்த முதலீட்டை ஜோகோவிச் செய்துள்ளார். உலகின் மிகமுக்கிய நாடுகளில் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும். வரும் கோடைக்காலத்தில் பிரிட்டனில் தங்கள் நிறுவன தடுப்பூசியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் இவான் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றை தடுப்பதற்காக மட்டுமல்லாமல் அதனை குணப்படுத்தும் வகையில் உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார் இவான். 

எதிர்வரும் பிரெஞ்சு ஓபன் தொடரின் பங்கேற்க ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்ற சூழல் எழுந்துள்ளது. அதற்குள் அவர் தனது நிறுவனத்தின் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்வார் என நம்புவோம்.