ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு 20 லட்சம் ரூபாயில் இருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சிறுதொழில் துறையினர் பயன் அடைவார்கள்.
டெல்லியில் நடைபெற்ற 32-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பின் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு உயர்வால் சிறுதொழில் நிறுவனங்கள் பெரிதும் பலன் பெறும் எனத் தெரிவித்தார். மேலும் ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் ஆண்டு வர்த்தகம் புரியும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு சலுகை திட்டம் இனி ஒன்றரை கோடி ரூபாய்க்கு கீழ் வணிகம் புரிபவர்களுக்கும் வழங்கப்படும் என அருண் ஜெட்லி தெரிவித்தார்.
தற்போது உற்பத்தியாளர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் தொகுப்பு சலுகை திட்டம் சேவைத் துறையினருக்கும் விரிவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
ரியல் எஸ்டேட் மற்றும் லாட்டரி தொழிலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து ஆராய 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் எனவும் அருண் ஜெட்லி தெரிவித்தார். பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்கும் அறிவிப்பு கடந்த முறை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் சிறுதொழில் துறையினருக்கு பெரும் பயன் தரும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் ஜெட்லி வெளியிட்டுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஜிஎஸ்டியில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.