இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கின.
பகல் 12 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,146 புள்ளிகள் சரிந்து 37,324 புள்ளிகளில் வணிகமாகியது. தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 355 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 10,914 புள்ளிகளில் வர்த்தகமாகியது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக பொருளாதாரம் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக மற்ற ஆசியப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் வர்த்தகமாவதால் இந்திய பங்கு சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாவதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடும் நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் யெஸ் வங்கியின் நிர்வாகக் கட்டுப்பாட்டை தற்காலிகமாக ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதால் அவ்வங்கிப் பங்குகள், சந்தைகளில் இன்று 60 சதவிகிதம் வரை குறைந்து வர்த்தகமாகின்றன.
இதுதவிர எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளும் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. இதற்கிடையில், அந்நியச் செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 65 காசுகள் சரிந்து 73 ரூபாய் 99 காசானது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலையும் ஒரு சதவிகிதத்திற்கும் மேல் குறைந்து ஒரு பீப்பாய் 49.47 டாலரில் வர்த்தகமாகியது.