Sensex, Nifty Fall as RBI Hikes Repo Rate to 5.50% PTI
வணிகம்

ரெப்போ ரேட் உயர்வு அதிர்ச்சி: இரு நாள் லாபத்தை இழந்த சென்சக்ஸ், நிஃப்டி சரிவு!

RBI-யின் ரெப்போ ரேட் உயர்வையும், கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தையும் தொடர்ந்து, இரு நாள் லாபத்தை இழந்த சென்சக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிவுடன் முடிந்தன.

PT WEB

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

கடந்த 2 நாட்களாக சரசரவெனப் பாய்ந்தேறிய பங்குச் சந்தை, இன்று, அக்டோபர் 7 அன்று, திடீர் சரிவைக் கண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வும், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ரெப்போ ரேட் உயர்வும் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்த இரட்டை அழுத்தம், முதலீட்டாளர்களிடையே எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தி, இரு நாள் லாபத்தையும் ஒரே நாளில் மழுங்கடித்துள்ளது.

RBI Monetary policy - Hikes Repo Rate to 5.50%

கடந்த சில வாரங்களாகத் தொடர் வீழ்ச்சியை நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் சந்தித்து வந்தன. உலகளாவிய வர்த்தகப் பதற்றங்கள், மேற்கு ஆசியப் போர் சூழல், மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விலகல் ஆகியவை இதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டன. இந்த நிலையில், அக்டோபர் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் ஷேர் மார்க்கெட் எதிர்பாராத வகையில் வேகமாக உயர்ந்தது — இது முதலீட்டாளர்களுக்கு சற்று நம்பிக்கையை அளித்திருந்தது. அக்டோபர் 6 அன்று, சென்செக்ஸ் 446.78 புள்ளிகள் உயர்ந்து 72,829.25 ஆக இருந்தது. நிஃப்டி 135.95 புள்ளிகள் உயர்ந்து 22,691.70 ஆக முன்னேறியது.

இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தது கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு. மத்திய கிழக்கு எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்கவும், உலக சந்தைக்கு விநியோகத்தைப் பெருக்கவும் ஜி7 நாடுகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஒரே இரவில் 2 அமெரிக்க டாலர்கள் சரிந்த பின், பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய்க்கு 101 அமெரிக்க டாலர் (USD 101/barrel) அளவில் நிலைபெற்றன. இறக்குமதி செய்யப்படும் எண்ணெயையே பெரிதும் சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு, எண்ணெய் விலைக் குறைவு பணவீக்க அழுத்தத்தைத் தளர்த்தும் என்பதால், இந்தச் செய்தி சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த நம்பிக்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இன்று, அக்டோபர் 7 அன்று, உள்நாட்டுப் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிந்தன. நிஃப்டி 50, 87.40 புள்ளிகள் குறைந்து 22,687.35 ஆகக் குறைந்தது, பிஎஸ்இ சென்செக்ஸ் 154.23 புள்ளிகள் குறைந்து 72,929.75 ஆக நிறைவடைந்தன. ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்குப் பின்னர் இந்த வீழ்ச்சி காணப்படுகிறது. வட்டி விகித உயர்வுச் செய்திகள் வெளியான உடனேயே, வங்கி, நிதி நிறுவனப் பங்குகள் முதல் கடன் சார்ந்த நுகர்வுத் துறைகள் வரை பரவலான விற்பனை அழுத்தத்தை எதிர்கொண்டதாகத் தெரிகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு, 25 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியது. தற்போது வட்டி விகிதம் 5.25%-லிருந்து 5.50% ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியப் போர்ப் பதற்றத்தால் நிலவும் பணவீக்கம் காரணமாக, வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ரெப்போ ரேட் உயர்வு என்பது, வணிக வங்கிகளுக்கு RBI கடன் கொடுக்கும் வட்டி விகிதம் உயர்வதைக் குறிக்கும்; இதன் நேரடி விளைவாக, வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களின் EMI தொகையும் உயரக்கூடும். இது நுகர்வோர் செலவினத்தையும், அதன் வழியாக பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சந்தை நிபுணர்களின் பார்வையில், அடுத்த சில நாட்களில் முதலீட்டாளர்கள் RBI-யின் அடுத்தகட்ட அணுகுமுறை மற்றும் உலகளாவிய எண்ணெய் விலை நிலைத்தன்மை ஆகியவற்றைக் கவனமாகக் கண்காணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியப் போர் சூழல் தொடர்ந்தால், எண்ணெய் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், சந்தை நிலையற்ற தன்மையில் (volatility) தொடரும் வாய்ப்புள்ளது.