மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியான நிலையில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக முன்னிலை வகிப்பதால் பங்கு சந்தை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா மற்றும் சீன இடையே ஏற்பட்ட வர்த்தக போரால் உலக பங்கு சந்தை சரிவை சந்தித்தது. இதில் இந்திய பங்குசந்தையான நிஃப்டி மற்றும் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இரண்டுமே கடும் சரிவை சந்தித்தது. தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த இந்த இரண்டுமே இந்த கடந்த வாரம் மெல்லமாக சரிவில் இருந்து மீண்டது.
பின்னர், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த பிறகு வெளியான கருத்துக்கணிப்புகளில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்ற தகவல் வெளியானதால், பங்கு சந்தை பெரும் உயர்வு கண்டது. கடந்த திங்கட்கிழமை மட்டுமே மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஆயிரத்து 216 புள்ளிகள் அதிகரித்து 39 ஆயிரத்து 147 புள்ளிகளில் வணிகமாகியது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 360 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 766 புள்ளிகளில் வர்த்தகமாகியது.
இந்நிலையில் கருத்துக்கணிப்புகளில் கணிக்கப்பட்டது போலவே பாஜக தனிபெரும்பான்மையுடன் 325 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் காலை முதலே வேகமாக பங்கு சந்தை உயர்ந்தது. சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 40 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 12 புள்ளிகளை எட்டியது. இது வரலாறு காணாத உயர்வு ஆகும்.