வணிகம்

'மழைநீரில் வீணாகும் நிலை; இந்தாண்டு உப்பு தட்டுப்பாடு ஏற்படலாம்'- உற்பத்தியாளர்கள் கருத்து

'மழைநீரில் வீணாகும் நிலை; இந்தாண்டு உப்பு தட்டுப்பாடு ஏற்படலாம்'- உற்பத்தியாளர்கள் கருத்து

நிவேதா ஜெகராஜா

இந்த ஆண்டில் தென்னிந்தியா முழுவதும் உப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படுக்கூடும் எனக் கணித்துள்ளனர் உப்பு உற்பத்தியாளர்கள்.

தமிழகத்தில் நடக்கும் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது தூத்துக்குடி. அடுத்தபடியாக மரக்காணமும், அதன் பின்னர் வேதாரண்யமும் இருக்கிறது. இந்த பகுதிகளில் இருந்துதான் பெரும்பாலும் தென்னிந்தியாவிற்கு உப்பு விநியோகிக்கப்படுகிறது. இதில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 10 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கின்றனர் அப்பகுதி உப்பு உற்பத்தியாளர்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை இவ்விடங்களில் உப்பு உற்பத்தி நடைபெறும். அதன் பின்னர் பருவமழை துவங்கியவுடன் உற்பத்தி முற்றிலுமாக தடைபடும். இதுதான் வழக்கமான நடைமுறை.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலுள்ள சுமார் 1500 ஏக்கர் பரப்பளவிலான உப்பு உற்பத்தி செய்யப்படும் இடம், கடந்த இரு தினங்களில் மழைநீரில் முழுவதுமாக நனைந்து சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டில் உப்பு உற்பத்தி குறைவாகும் என கூறியுள்ளார்கள் உற்பத்தியாளர்கள்.

மேலும், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக சுமார் 150 டன் உற்பத்தி ஆன நிலையில் மீண்டும் தண்ணீரில் நனைந்து வீணாகிப் போய் விட்டது என்று தெரிவித்திருக்கிறார்கள் உப்பு உற்பத்தியாளர்கள். அத்துடன் அடிக்கடி பருவமழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி பெரிய அளவில் தடைபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 1200 குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்த உப்பு உற்பத்தி தொழிலை மட்டுமே நம்பி இருந்து வருகிறார்கள்.

உற்பத்தி குறைவால், உப்பின் விலை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அவர்கள் இதுகுறித்து பேசுகையில், “கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, 100 கிலோ மூட்டை கொண்ட உப்பு 80 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் உற்பத்தி பெருமளவு குறைந்து போனதால் உப்பின் விலை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 200 ரூபாயிலிருந்து 230 ரூபாய் வரை 100 கிலோ மூட்டை உப்பு உற்பத்தி ஆகியுள்ளது.

கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக, உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்ட உப்பு முழுவதுமாக கரைந்து விட்டது. பாதுகாப்பு செய்யப்பட்ட உப்பு மூட்டைகளை, உடனடி நடவடிக்கையாக இன்று விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மழை இப்படி தொடர்ந்து விட்டுவிட்டு பெய்தால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி சரிபாதி அளவு குறைந்து போகலாம். இன்னும் பத்து நாட்களுக்கு வெயில் காய்ந்தால் மட்டுமே மீண்டும் உற்பத்தி துவக்க முடியும். அப்படியில்லாமல் மழை தொடர்ந்துக்கொண்டே இருந்தால், இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி இத்தோடு முடிந்து விடும்” என்று  என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

- ஜோதி நரசிம்மன்