வணிகம்

மீண்டும் தொடங்கவுள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை

EllusamyKarthik

கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமானது ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். முதலில் வாகன முன்பதிவு தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த செப்டம்பரில் ‘பர்சேஸ் விண்டோ’ மூலம் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் வாகனத்தின் மொத்த தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் முதல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், விரைவில் ஓலா நிறுவனம் தனது பர்சேஸ் விண்டோவை மீண்டும் லைவில் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

“ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அதனை டெலிவரி செய்துள்ளோம். சில வாகனங்கள் டிரான்ஸிட்டில் இருக்கும். அது தவிர மற்ற அனைத்தும் டெலிவரி மையங்களில் உள்ளன. ஆர்.டி.ஓ பதிவு பணிகளும் நடந்து வருகிறது. இதன் மூலம் நிறைய தெரிந்து கொண்டுள்ளோம். மாநிலத்துக்கு மாநிலம் ஆர்.டி.ஓ பதிவு முறையில் மாற்றம் இருக்கிறது. 

விரைவில் அடுத்த பர்சேஸ் விண்டோ திறக்கப்படும். அதுவரை காத்திருங்கள்” என ட்வீட் மூலம் அவர் தெரிவித்துள்ளார். 

முதல் டெலிவரியில் சில சிக்கல்களை ஓலா எதிர்கொண்டது. வாடிக்கையாளர்களிடம் கொண்டு சென்று சேர்க்கப்பட்ட ஓலா ஸ்கூட்டர்களில் சில உடைந்தும், கீறல்களுடனும் இருந்தது. அது குறித்து வாடிக்கையாளர்கள் புகார் எழுப்ப, அதனை மாற்றித் தருவதாக ஓலா உறுதி அளித்திருந்தது. 

தற்போது S1 மற்றும் S1 ப்ரோ என இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா விற்பனை செய்து வருகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை முறையே ரூ.99,999 மற்றும் ரூ.1,29,999 என உள்ளது.