வணிகம்

இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

webteam

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார சீர்குலைவு உலக நிதி சந்தைகளில் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரை நம்பகமான முதலீடாக கருதி அவற்றை அதிகளவில் வாங்கி இருப்பு வைத்து வருகின்றனர். இதனால் அமெரிக்க டாலருக்கு சர்வதேச சந்தையில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டு அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது. 

இதன் தொடர்ச்சியாகவே இந்தியா உள்ளிட்ட நாடுகளுடைய நாணயங்களின் மதிப்பு கடந்த சில வாரங்களாக கடுமையாக வீழ்ச்சி கண்டு வருகின்றன. இன்றைய வர்த்தகத்தின் இடையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் குறைந்து 70 ரூபாய் 9 காசாக இருந்தது. ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி சார்ந்த பொருட்களின் விலை உயரும். இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் தங்கம், ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஜவுளி, மென்பொருள் சேவைகள் உள்ளிட்ட தொழிற்துறையினர், ரூபாய் மதிப்பு சரிவால் பலன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது