முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் ஆன்லைன் வர்த்தகத்திலும் களமிறங்க உள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வந்த பிறகு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிவை சந்திக்க ஆரம்பித்தன. ஜியோவின் அதிரடி ஆஃபர்களால் ஏர்டெல், வோடஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ஜியோ பக்கம் திரும்பினர். இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்தக்கட்டமாக ஆன்லைன் வர்த்தகத்திலும் களமிறங்க உள்ளது.
நாடு முழுவதும் 6500-க்கும் அதிகமான இடங்களில் சுமார் 10,000 ரிலையன்ஸின் ரீடெய்ல் கடைகள் உள்ளன. அதேபோல ஜியோவை எடுத்துக்கொண்டால் 280 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எனவே ஜியோ, ரிலையன்ஸ் மொபைல், மற்றும் ரீடெய்ல் ஆகியவற்றை இணைத்து ஆன்லைன் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் களமிறங்க உள்ளதாக தெரிகிறது.
தற்போது இந்தியாவில் அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிரடி காட்டி வருகின்றன. ஆனால் இவற்றிற்கு ரீடெய்ல் கடைகள் இல்லை. எனவே ஒருவேளை ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் தடம்பதிக்க ஆரம்பித்தால் அது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.