வணிகம்

ஜிஎஸ்டி மாற்றம் இன்று முதல் அமல்

ஜிஎஸ்டி மாற்றம் இன்று முதல் அமல்

webteam

ஜிஎஸ்டியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் குறிப்பாக அனைத்து ஹோட்டல்களிலும் 5 சதவிகித ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் நடைமுறையும் அடங்கும்.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 132 நாட்களில் 213 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 180 பொருட்களுக்கு 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டிருந்தது. 28 சதவிகித வரி விதிப்பு பட்டியலில் இருந்து 80 சதவிகித பொருட்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நேரத்தில், 250 பொருட்களுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெறும் 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களும், ஆடம்பர பொருட்களுமே அந்த உயர் வரி விதிப்பு பட்டியலில் இருக்கின்றன. இது ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

சாக்லேட், மரச்சாமான்கள், சோப்பு, அழகுசாதனப் பொருட்கள், ஷாம்பூ, மார்பிள், டைல்ஸ், தொலைக்காட்சி, வானொலி சாதனங்கள், உள்ளிட்ட 178 பொருட்களுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. வெட் கிரைண்டர், பீரங்கி வாகனம் ஆகியவை 18 சதவிகித வரி விதிப்பில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட பால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, நீரிழிவை ஏற்படுத்தாத உணவு, அச்சக மை, மூக்குக் கண்ணாடியின் ஃபிரேம், விவசாய இயந்திரங்கள் உள்ளிட்ட 13 பொருட்களுக்கான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளன. கடலை மிட்டாய், பொறி உருண்டை, சமையல் காரப்பொடி உள்ளிட்ட 6 பொருட்களுக்கான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி வலைகள், ஆடைகள், கயிறு உள்ளிட்ட 8 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 12 சதவிகித வரி 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. உலர வைக்கப்பட்ட காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட மீன் உள்ளிட்ட 6 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 சதவிகித வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.