வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
காலாண்டு நிதிக் கொள்கை மீதான ஆய்வுக் கமிட்டியின் கூட்டம் நடந்த நிலையில், அதுகுறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் குறுகிய காலக் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியான ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாக நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கிகளின் நிதி இருப்புக்கு ரிசர்வ் வங்கி அளிக்க வேண்டிய ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவிகிதமாக நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நுகர்வோர் பணவீக்க விகிதம் 4 சதவிகிதமாக இருக்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், நாட்டின் வளர்ச்சி விகிதம் குறித்த தனது கணிப்பை ரிசர்வ் வங்கி குறைத்துக் கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் வளர்ச்சிக்கான கணிப்பு 7.3 சதவிகிதத்தில் இருந்து 6.7 சதவிகிதமாக குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.