தங்கத்தின் மதிப்பில் இனி 90 சதவிகிதம் வரை கடன் தர ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை ஆய்வு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கொரோனா பொதுமுடக்க காலத்தில் பொதுமக்களின் நிதித் தேவை கருதி இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். தற்போது வரை வங்கிகள் தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சம் 75 சதவிகிதம் வரை மட்டுமே கடன் வழங்க அனுமதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், “கொரோனா சூழலால் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில் நிறுவனங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் சீரமைப்பை செய்து கொள்ள அனுமதிக்கப்படும். இது தவிர தனி நபர்கள், வணிக நிறுவனங்களுக்கும் வங்கிக் கடன் சீரமைப்பு மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். கொரோனா பொதுமுடக்கங்களில் இருந்து பொருளாதாரம் தற்போது மீண்டு வந்தாலும் அடுத்தடுத்து தொற்று அதிகரித்து வருவதால் பொருளாதார மீட்சி நிச்சயமற்றதாக இருக்கிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு முற்றும் முழு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்மறை நிலையிலேயே இருக்கும். தற்போது பணவீக்க வீதம் அதிகமாக இருந்தாலும் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில் இது குறைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.