வணிகம்

தொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்!

தொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்!

webteam

நாட்டில் சுமார் 120 கோடி பேர் தொலைபேசி மற்றும் கைப்பேசி பயன்படுத்தும் நிலையில், ஜியோ நிறுவனம் மட்டுமே தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய  தொலைத்தொடர்பு நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லும் வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றன

நாட்டில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களில் 66 கோடியே 27 லட்சம் பேரும், கிராமப் புறங்களில் 50 கோடியே 82 லட்சம் பேரும் செல்போன் பயன்படுத்துகின்றனர்.

கடந்த ஜூலை மாத இறுதியில் தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 116 கோடியே 83 லட்சத்து 12 ஆயிரமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாத இறுதியில் அந்த ‌எண்ணிக்கை 117 கோடியே 10 லட்சமாக உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 26 லட்சத்து 83 ஆயிரத்து 644 பேர் புதிதாக கைப்பேசி இணைப்புக‌ளைப் பெற்றுள்ளனர்.

செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் போதிலும், பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களாக பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கீழ் நோக்கியே செல்வதால், சந்தையில் அவற்றின் பங்கும் சரிவைச் சந்தித்து வருகின்றன. அதேசமயம் ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் சந்தை மதிப்பில் சரிவை கண்டுள்ளன. ஜியோ நிறுவனம் அதிகப்‌படியான வா‌டிக்கையாளர்களை கவர்ந்துள்ளதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.

ஜியோ நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2.49 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஜியோவுக்கு போட்டியாக கருதப்படும் ஏர்டெல் நிறுவனம் 0.17 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. வோடோஃபோன் ஐடியா 1.30 சதவீதம் படுவீழ்ச்சியை கண்டுள்ளது. தனியார் நிறுவனங்களே இப்படி பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் 0.20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஜியோ நிறுவனம், 84 லட்சத்து 45 ஆயிரத்து 165 வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது. ஏர்டெல் 5 லட்சத்து 61 ஆயிரத்து 135 வாடிக்கையாளர்களையும், வோடோஃபோன் ஐடியா நிறுவனமும் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 702 வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

ஆகஸ்ட் மாத வரையிலான நிலவரப்படி, ஜியோவில் ஒட்டுமொத்தமாக 34 கோடியே 82 லட்சத்து 40 ஆயிரத்து 104 வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏர்டெல்-ல் 32 கோடியே 79 லட்சத்து 52 ஆயிரத்து 234 வாடிக்கையாளர்களும், வோடோஃபோன் ஐடியா-வில் 37 கோடியே 50 லட்சத்து 63 ஆயிரத்து 514 வாடிக்கையாளர்களும் உள்ளனர். பிஎஸ்என்எல் நிறுவனமோ 11 கோடியே 63 லட்சத்து 20 ஆயிரத்து 51 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவை வழங்கி வருகிறது.