வணிகம்

58 நாட்களில் ரூ.1.68 லட்சம் கோடி முதலீடு - கடனில்லா நிறுவனமான ரிலையன்ஸ்!!

webteam

58 நாட்களில் ரூ.1.68 லட்சம் கோடி முதலீடு வந்ததால் கடன் இல்லாத நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மாறியுள்ளது

கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜியோவின் 9.99% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.43,573.62 கோடி வாங்கியதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று ஜென்ரல் அட்லாண்டிக், கேகேஆர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஜியோ பங்குகளில் முதலீடு செய்தன. மேலும் 8வது நிறுவனமாக அபுதாபி முதலீட்டு நிறுவனம் ரூ.5,683.50 கோடியை ஜியோ பங்குகளில் முதலீடு செய்தது. இதன்மூலம் 1.16% ஜியோ பங்குகளை அந்நிறுவனம் வாங்கியது.

1.85% பங்குகளை அபுதாபியைச் சேர்ந்த மற்றொரு முதலீட்டு நிறுவனமான முபாடலா வாங்கியது. இப்படி ஜியோவில் சர்வதேச நிறுவனங்கள் பல முதலீடு செய்தன. அதேபோல் பங்கு விற்பனை மூலம் ஜியோ நிதி சேர்த்தது. அதன்படி சர்வதேச நிறுவனங்கள் மூலம் ரூ.1.15 லட்சம் கோடியும், பங்கு விற்பனை மூலம் ரூ.53,124 கோடியும் ஜியோவிற்கு கிடைத்துள்ளது. இந்த சாதனை மூலம் கடன் இல்லாத நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மாறியுள்ளது. வெறும் 58 நாட்களில் இந்த சாதனையை செய்து முடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், உலகளாவிய நிதி முதலீட்டாளர்கள் ஜியோவுடன் கூட்டு சேர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் நாங்கள் பெருமை கொள்கிறோம். பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மரபணுவோடே ஒன்றிய விஷயம். கடன் இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் மாறியுள்ளது. இந்த வேளையில், எதிர்காலத்தில் பல லட்சிய இலக்குகளை நோக்கி பயணித்து வெற்றியடைவோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பங்குதாரர்களுக்கு இடையே பேசிய முகேஷ் அம்பானி. 2021 மார்ச் மாதத்திற்குள் ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிறுவனமாக இது இருக்கும் என பேசினார். அவர் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே தன்னுடைய வார்த்தைகளை அம்பானி நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது