கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சேர்மனான அனில் அம்பானி, சம்பளம் அல்லது கமிஷனாக ஒரு ரூபாய் கூட பெறப்போவதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பு நிதியாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சேர்மனான அனில் அம்பானி, சம்பளமே பெறப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், கடும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்த நிறுவனம் பெற்றுள்ள ரூ.45,000 கோடி அளவிலான கடனை வரும் டிசம்பருக்குள் செலுத்த வேண்டும் என்று கடன்கொடுத்தவர்கள் காலக்கெடு நிர்ணயித்துள்ளனர். ஏர்செல் மற்றும் ப்ரூக்ஃபீல்டு ஆகிய நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தங்களால் நிறுவனத்தின் கடன் 60 சதவீதம் வரை அல்லது ரூ.25,000 கோடி வரை குறைக்கப்படும் என்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது.