ஜிஎஸ்டியில் 42 விதமான பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று பேசியபோது, 42 விதமான பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். கோதுமை மாவு, மைதா, கடலை மாவு ஆகியவற்றிற்கு வரி விதிப்பு கூடாது எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
பனை வெல்லத்திற்கு 18 சதவிகித வரிவிதிப்பு மிக அதிகம் எனக் குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார், மசாலா பொருட்களுக்கான 28 சதவிகித வரி, சர்க்கரைக்கான 18 சதவிகித வரியும் குறைக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
குடிநீர் கேன்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கோவையில் தயாராகும் வெட் கிரைண்டருக்கு வரி குறைக்க வேண்டும். மாநில மொழியில் வெளியாகும் திரைப்படத்திற்கு வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜெயக்குமார், தமிழ்த் திரைப்படங்களுக்கு 28 சதவிகித வரி என்பது அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி மசோதாவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், விரைவில் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.