ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான நிபுணர்கள் அளித்த பரிந்துரைப் படி இம்முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. பல்வேறு கணக்கீடுகளின் படி தற்போது ரிசர்வ் வங்கியிடம் 9 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதி உள்ளதாக தெரிகிறது. சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் தம்மிடம் உள்ள உபரி நிதியில் ஒரு பகுதியை அந்தந்த அரசுகளுக்கு வழங்கும் நிலை, இந்தியாவிலும் வர வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டது.
ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை எந்தளவுக்கு மத்திய அரசுக்கு வழங்கலாம் என முடிவெடுப்பதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு கடந்த வெள்ளிக்கிழமை தனது அறிக்கையை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்திருந்தது. மத்திய அரசு ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், தற்போது கிடைக்கவிருக்கும் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மிகப்பெரிய வருவாயாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் அரசின் நிதிப்பற்றாக்குறை கணி்சமாக குறைவதுடன் அதிகளவிலான நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குவது தொடர்பாக கடந்தாண்டு சர்ச்சை ஏற்பட்டது. ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ததற்கு, இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்பட்டது.