வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி கால் சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்ட முடிவில் வட்டிக்குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கு ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதமான ரெப்போ, 6.25% ஆக உள்ள நிலையில் அது 6% ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 2 புள்ளி 4 சதவிகிதமாக மேலும் குறைய வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுதவிர, நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 2 சதவிகிதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளது. கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற நிதிக் கொள்கையின்போது ரெப்போ வட்டி விகிதம் கால் சதவிகிதம் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், 2 மாதங்களில் மீண்டும் வட்டி கால் சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. சக்தி காந்ததாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு இரண்டு கூட்டத்திலும் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.