வணிகம்

அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.8%ஆக இருக்கும் - ரிசர்வ் வங்கி கணிப்பு

Sinekadhara

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022-23-ஆம் நிதியாண்டில் 7.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் மூன்று நாள் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் நடைபெற்ற நிலையில், 10-ஆவது முறையாக குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை எனவும், தற்போதுள்ள 4 சதவிகிதமே தொடரும் எனவும் அறிவித்துள்ளது.

அதேபோல, வங்கிகள் செய்யும் குறுகியகால டெபாசிட்டுகளுக்கான வட்டியான ரி‌வர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35 சதவிகிதம் என்ற பழைய நிலையிலேயே தொடரும் எனவும் ‌ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் பழைய நிலையிலேயே தொடரும்.

உணவுப் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், பணப்புழக்கத்தை தற்போதுள்ள நிலையிலேயே வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

சர்வதேச நிதியத்தின் கணிப்புப்படி உலகிலேயே அதிக வேகத்தில் வளரும் பொருளாதாரம் இந்தியாதான் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவிகிதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கையில் வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5 சதவிகிதமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.