வணிகம்

``2031-ல் 2 லட்சம் புள்ளிகளை தொடும் சென்செக்ஸ்”- ராம்தேவ் அகர்வால் மீண்டும் கணிப்பு

webteam

இந்திய பங்குச்சந்தை நிபுணர்களில் முக்கியமானவர், மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் தலைவர் ராம்தேவ் அகர்வால். கடந்த ஆண்டு பட்ஜெட் சமயத்தில் “2031-ம் ஆண்டுக்குள் சென்செக்ஸ் 2 லட்சம் புள்ளிகளை தொடும்” என கணித்திருந்தார். தற்போதைய பட்ஜெட் முடிவிலும் இதே கருத்தை தெரிவித்திருக்கிறார் அவர். தற்போதைய பட்ஜெட் 2 லட்சம் புள்ளிகள் என்னும் இலக்கை எந்த வகையிலும் மாற்றவில்லை என ராம்தேவ் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “இந்தியாவின் வளர்ச்சி ஆண்டுக்கு 7% - 8% சதவீதம் வரை இருக்கும். அதேபோல பணவீக்கம் அடுத்த பத்தாண்டுகளுக்கு 4%-5% அளவுக்கு இருக்கும். அப்படியானால் முக்கியமான நிறுவனங்களின் வளர்ச்சி சராசரியாக 15 சதவீதம் என்னும் அளவில் இருக்கும். அதனால் சென்செக்ஸ் 2 லட்சம் புள்ளிகளை தொடுவதில் எந்த சிக்கலும் இருக்காது” என தெரிவித்திருக்கிறார்.

மேலும், “மத்திய அரசு விரிவாக்க பணிகளுக்கு செலவிடும் தொகையை அடுத்த நிதி ஆண்டுக்கு உயர்த்தி இருக்கிறது. இதன் காரணமாக நிறுவனங்களின் லாப விகிதம் உயரும் வாய்ப்பு இருக்கிறது. கோவிட் முக்கியமான சிக்கலாக இருந்தாலும் பெரும்பாலான துறைகள் கோவிட்டுக்கு முந்தைய வளர்ச்சியை எட்டிவிட்டன.

சில எஸ்.எம்.இ. நிறுவனங்கள் மீண்டு வருவதற்கான நடவடிக்கையில் உள்ளன. அடுத்த பத்தாண்டுகளில் வங்கித்துறை சிறப்பாக இருக்கும். குறைந்த வட்டி விகிதம் மற்றும் கடன் வழங்கும் அளவு அதிகமாக இருப்பதால் அடுத்த பத்தாண்டுகள் சிறப்பாக இருக்கும். அதேபோல இந்திய ஐடி பங்குகளின் வளர்ச்சியும் சிறப்பானதாக இருக்கும்” என குறிப்பிட்டிருக்கிறார்.

2027-ல் சென்செக்ஸ் ஒரு லட்சம்!

அடுத்த ஐந்தாண்டுகளில் சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளை தொடும் என சர்வதேச பங்குச்சந்தை வல்லுநர்கள் கிறிஸ்டோபர் வுட்ஸ் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக 2026-27-நிதி ஆண்டில் ஒரு லட்சம் புள்ளிகளை சென்செக்ஸ் தொடும் என கணித்திருக்கிறார். அவர் கணிப்புப்படி, பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கிறது, நிலையான கரன்ஸி, ஜிடிபி வளர்ச்சி, வரி வருமானம் உயர்ந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தையின் வளர்ச்சி இருக்கும்.

இந்த வளர்ச்சியில் இரு விஷயங்களால் சிக்கல் ஏற்படலாம். அவை அமெரிக்க பெட்ரல் ரிசர்வின் வட்டி விகிதம் உயர்த்துவது மற்றும் கச்சா எண்ணெயின் விலை உயர்வு. இவை இரண்டும், பங்குச்சந்தை வளர்ச்சிக்கு பாதகமாக முடியலாம். அடுத்த சில ஆண்டுகளில் சர்வதேச சூழல் காரணமாக இந்திய சந்தைகள் சரியும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் அதனை வாங்குவதற்கான வாய்ப்பாக கருதலாம் என இவர் தெரிவித்திருக்கிறார்.

பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள், இதில் கவனத்தில் கொண்டு, வரும் நாள்களில் செயல்படவும்!