வணிகம்

"எங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க தனியார் பொய் பிரசாரம்" - பிஎஸ்என்எல் கொந்தளிப்பு

"எங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க தனியார் பொய் பிரசாரம்" - பிஎஸ்என்எல் கொந்தளிப்பு

jagadeesh

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு எதிராக நேர்மையற்ற சிலர், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆதரவுடன் பரப்பும் பொய் பிரசாரம் அடிப்படை ஆதாரமற்றது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் டாக்டர் வி.கே.சஞ்சீவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவையை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளது என நேர்மையற்ற சிலர், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆதரவுடன் பொய் பிரசாரத்தை பரப்புகின்றனர். அவர்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை தங்கள் நிறுவனத்துக்கு ஈர்க்க முயற்சிக்கின்றனர்.

இந்த பொய் பிரச்சாரம் அடிப்படை ஆதாரமற்றது. கூடுதலாக உள்ள ஊழியர்களை குறைப்பதற்காக தானாக முன்வந்து ஒய்வு பெறும் திட்டத்தை மத்திய அமைச்சரவையின் முடிவுப்படி பிஎஸ்என்எல் அமல்படுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் தனது மறுமலர்ச்சி கட்டத்தில் உள்ளது. இதற்கான பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெட்வொர்க்கை பராமரிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்கவும், பங்குதாரர்கள் குழுவை பிஎஸ்என்எல் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்த நேர்மையற்ற சிலர், தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் பிஎஸ்எல்எல் நெட்வொர்க் சொத்துக்களை சேதப்படுத்தி, பிஎஸ்என்எல் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றனர். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை பிஎஸ்என்எல் எடுத்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை bsnlprchn@gmail.com என்ற இ-மெயில் அல்லது 9445024095 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ் அப் அல்லது எஸ்எம்எஸ் மூலமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது.

லேண்ட் லைன், செல்போன் சேவைகளை வழங்குவதோடு, வீடுகளுக்கு பைபர் இணைப்பு FTTH (Fibre to the Home) சேவைகளையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது. பிஎஸ்என்எல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தனது நெட்வொர்க் மூலம் அனைத்து சேவைகளையும் வழங்குகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முறையும் உள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் லேண்ட்லைன் தொடர்பான புகார்களை, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் மையத்தில் 1500 என்ற எண்ணிலும், பிராண்பேண்ட் தொடர்பான புகார்களை 1504 என்ற எண்ணிலும், செல்போன் வாடிக்கையாளர்கள் 1503 என்ற எண்ணிலும் குறைகளை தெரிவிக்கலாம்.

அதோடு, பிஎஸ்என்எல் இணையதளம் www.chennai.bsnl.co.in மூலம் அதிகாரிகளை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்க முடியும். புகார் கொடுக்க முடியும்" என்று கூறியுள்ளார்.