வணிகம்

ஜிஎஸ்டியில் மேலும் சலுகைகள் அறிவிக்கப்படும்: பிரதமர் மோடி

webteam

சிறுவணிகர்கள் பயன் அடையும் வகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மேலும் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டியால் சிரமங்களை சந்திப்பதாக சிறுவணிகர்கள் தெரிவித்த நிலையில், அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கூறினார். தொழில் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 42 இடங்கள் முன்னேறி 100-வது இடத்தை பிடித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். வரும் 9ம், 10ம் தேதிகளில் கவுகாத்தியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மேலும் பல சலுகைகளை அறிவிப்பார் என்றும் பிரதமர் கூறினார்.

கடந்த மாதம் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்ற 22வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடுத்தர நிறுவனங்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.75 ஆயிரத்திலிருந்து, ரூ.1 கோடி வரை உயர்த்தப்பட்டது. அத்துடன் ரூ.1.5 கோடி வரை பணமாற்று செய்யும் நிறுவனங்கள் மாதம் தோறும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதை, 3 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறுவணிகர்கள் பயன்பெறும் வகையில் மேலும் சலுகைகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.