வணிகம்

விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள் எதிரொலி: ஆன்லைனில் எருக்கலம் பூ, வேப்பங்குச்சி விற்பனை

நிவேதா ஜெகராஜா

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக மக்கள் பலரும் கடைகளுக்கு சென்று பூஜை மற்றும் வழிபாட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு அச்சம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக எருக்கலம் பூ, செம்மண், அடுப்புகரி, வரட்டி போன்றவற்றின் ஆன்லைன் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஆன்லைன் விற்பனை என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. டிவி, மொபைல், துணி, வாஷிங்மெஷின் என வீட்டு உபயோக பொருட்களையெல்லாம் ஆன்லைன் வழியாக வீட்டுக்கே டெலிவரி செய்யப்படுவதையே பொதுமக்கள் விரும்புகின்றனர். இதனால் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான சலுகைகளை வழங்கி வருகிறது.

அதிலும் பண்டிகை காலங்களில் சந்தை விலையை விட குறைந்த விலைக்கே தள்ளுபடியில் பொருட்கள் வீடு தேடி வருவதால், பொதுமக்களும் ஆன்லைன் சந்தையில் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் வாடிக்கையாளர்களின் சிறிய சிறிய தேவைகளை கூட நிவர்த்தி செய்ய தொடங்கிய ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் பல்வேறு புதுப்புது முயற்சிகளை தொடங்கியுள்ளது. உதாரணத்துக்கு, செடி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் செம்மண் விற்பனை ஆன்லைனில் செய்யப்படுகிறது. 5கிலோ செம்மண் 266ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எருக்கலம் பூக்களையும் ஆன்லைனில் ஒரு பாக்கெட் 151ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதைப்போல இயற்கை வேளாண் பொருட்களான 10 வேப்பங்குச்சிகள், 15 ஆலங்குச்சிகள் 100ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று அடுப்புக்கரி மற்றும் தேங்காய் சிரட்டை போன்ற அனைத்து வகையான பொருட்களும் ஆன்லைனில் கிடைக்கின்றன. ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் மூலமாக ஏராளமான வாடிக்கையாளர்களும் எருக்கலம் பூ, அடுப்புகரிகளையும் வாங்கி வருகின்றனர்.

நகரமயமாதலால் நகரங்களில் தேவையான சில பொருட்கள் கிடைக்காத நிலையில், ஆன்லைனில் எளிதாக கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.