மெட்லைஃப் (Medlife) நிறுவனத்தை வாங்கியதை அடுத்து, இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் பார்மஸி என்னும் சிறப்பைப் பெறுகிறது 'பார்ம்ஈஸி' (PharmEasy) நிறுவனம்.
மளிகைப் பொருட்கள், புத்தகங்கள் மட்டுமல்லாமல் மருந்து, மாத்திரைகள் வாங்குவது கூட ஆன்லைனில் நடக்கிறது. குறிப்பாக இந்த பெருந்தொற்று காலத்தில் மருந்தும் ஆன்லைனில் வாங்கப்படுகிறது.
மெட்லைஃப் நிறுவனத்தை மும்பையை சேர்ந்த பார்ம்ஈஸி நிறுவனம் வாங்கி இருக்கிறது. இன்று இந்த இணைப்பு நடந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணைப்பின் மூலம் இந்தியா முழுவதும் 20 லட்சம் குடும்பங்களுக்கு மருந்து, மாத்திரைகளை கொண்டு சேர்க்கிறோம் என பார்ம்ஈஸி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல மெட்லைஃப் நிறுவனத்தின் செயலி இன்று முதல் மூடப்படுகிறது. மெட்லைஃப் வாடிக்கையாளர்கள் நேரடியாக பார்ம்ஈஸி நிறுவனத்தின் செயலியில் ஆர்டர் செய்யலாம். மெட்லைஃப் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் பழைய தகவல்கள், மருத்துவர் பரிந்துரைகள் பார்ம்ஈஸி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மெட்லைஃப் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இல்லை. ஆனால் மெட்லைஃப் பங்குதாரர்களுக்கு பார்ம்ஈஸி நிறுவனத்தின் 19.59 சதவீத பங்குகள் கிடைக்கும் என தெரிகிறது. தவிர, மெட்லைஃப் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரருக்கு பார்ம்ஈஸி நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம் கிடைக்கும் என்றும் தெரிகிறது.
கடந்த மாதம் பார்ம்ஈஸி நிறுவனம் 35 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்டியது. இந்தியாவின் இ-பார்மஸி பிரிவில் நுழையும் முதல் யுனிகார்ன் (100 கோடி டாலர் சந்தை மதிப்பு) நிறுவனமாக பார்ம்ஈஸி மாறியது.
சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனம் சென்னையை சேர்ந்த நெட்மெட்ஸ் நிறுவனத்தை வாங்கியது. அதேபோல டாடா குழுமமும் 1எம்ஜி நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சியில் இருக்கிறது.
கோவிட்டுக்கு பிறகு இணையம் மூலம் மருந்து வாங்குவது மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் 90 லட்சம் குடும்பங்கள் இணையம் மூலம் மருந்து வாங்குவதாக ரெட்சீர் கன்சல்டிங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.