ஜூலை 1-ம் தேதியான இன்று கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து, 825 ரூபாயிலிருந்து 850 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் சிலிண்டரின் விலையானது 140 ரூபாய் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வது நடுத்தர மக்களை அதிகம் பாதித்துள்ளது.
கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 74.78 டாலர், அதாவது 5,563.22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. அதேபோல், இதுவரை இல்லாத அளவாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 80 காசுக்கும், டீசல் ஒரு லிட்டர் 93 ரூபாய் 72 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வே பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கக் காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜூலை 1ம் தேதி இன்று முதல், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும், 25 ரூபாய் உயர்ந்து 850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சிலிண்டரின் விலை 140 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் சிலிண்டர் விலை கடந்து வந்த பாதை.
2021-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை சிலிண்டர் ஒன்றின் விலை 140 ரூபாய் உயர்ந்துள்ளது. குறிப்பாக, 2021 ஜனவரி மாதத்தில் ஒரு சிலிண்டரின் விலை 710 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மூன்று முறையாக 100 ரூபாய் உயர்த்தப்பட்டு 810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் மாதத்தில் 835 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர், ஏப்ரல் மாதத்தில் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 825 ரூபாய்க்கு விற்பனையானது. அடுத்து வந்த மே, ஜூன் மாதங்களில் விலையில் மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி ஒரு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வது நடுத்தர மக்களை அதிகம் பாதித்துள்ளது. எனவே எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.