கொரோனா பேரிடர் காலத்தையொட்டிய மத்திய அரசின் கடன் திட்டங்களை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், நடுத்தர மக்கள் - ஏழைகளுக்கு நிதி ஆதாரம் கொடுப்பதுதான் தீர்வு என்று கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தொழில் துறைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை அறிவித்தார். குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதலாக 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த திட்டங்களை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக ட்விட்டரில் விமர்சனம் செய்திருக்கிறார். 'கடன் வழங்குவது என்பது நிறுவனங்களின் சுமையை மேலும் அதிகமாக்கும். தவிர, ஏற்கெனவே நிதி சிக்கலில் இருக்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்க எந்த வங்கியாளரும் முன்வர மாட்டார்கள்.
அத்துடன், ஏற்கெனவே நிதி சிக்கலில் இருக்கும் நிறுவனங்களுக்கு கூடுதலாக கடன் தேவைப்படாது. அவர்களுக்கு தேவை தொழிலில் மூலம் கிடைக்கும் வருமானமே தவிர, கடன் அல்ல' என ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
'அதிக சப்ளை இருப்பதால் தேவையை உருவாக்க முடியாது. சந்தையில் தேவை இருந்தால் இயல்பாக சப்ளையை உயர்த்த முடியும். வேலை இழப்பு, சம்பளம் குறைந்திருக்க கூடிய சூழலில் தேவையை உயர்த்த முடியாது. அதனால், நடுத்தர மக்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பதன் மூலமே தேவையை உயர்த்த முடியும். குறிப்பாக, நடுத்தர மக்கள் மற்றும் ஏழைகளுக்கு நிதி ஆதாரம் கொடுப்பதுதான் மூலம் தேவையை உயர்த்த முடியும். இந்த சிக்கலுக்கு இதுதான் தீர்வு' என ப.சிதம்பரம் ட்விட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார்.
'நிதி அமைச்சர் ஒன்றுமே அறிவிக்கவில்லை. ஆனால், தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்கிறார்' என காங்கிரஸ் விமர்சனம் செய்திருந்தது.
கடந்த 21-ம் தேதி இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 88 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. இதனையும் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்திருந்தார். 'இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறக்கூடும். இந்த அதிசயத்தை நிகழ்த்தியதற்காக மோடிக்கு நோபல் பரிசு கூட கிடைக்க கூடும்' என விமர்சனம் செய்திருந்தார்.
மேலும், 'இந்தியா - நியூசிலாந்து போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை கவலைபப்ட வேண்டாம். பெட்ரோல் பல மாநிலங்களில் சதம் அடித்திருக்கிறது' என குறிப்பிட்டிருந்தார். 'வரிக்கொள்ளை மூலமாக பல லட்சம் கோடி ரூபாய்களை நாள்தோறும் மக்களிடத்தில் இருந்து உறிஞ்சிகிறது' என்றும் விமர்சனம் செய்தார்.