வணிகம்

இந்திய அரசின் வசமாகும் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமான VI -வின் 35.8% பங்குகள்

EllusamyKarthik

இந்திய நாட்டின் மூன்றாவது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் 35.8 சதவிகித பங்குகள் இந்திய அரசின் வசமாக உள்ளது. அந்நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் மற்றும் ஏஜிஆர் கட்டண நிலுவைக்கான வட்டித் தொகையாக 16000 கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. தற்போது அதற்கு ஈடாக நிறுவனத்தின் பங்குகளை வழங்க உள்ளதாக ஒப்புதல் அளித்துள்ளது வோடஃபோன் ஐடியா (Vi). 

அதன்படி பார்த்தால் Vi நிறுவனத்தின் பங்குகளில் 35.8% அரசு வசமும், 28.5% வோடஃபோன் குழுமத்தின் வசமும், 17.8% ஆதித்யா பிர்லா குழுமத்தின் வசமும் இருக்கும். இதன் மூலம் Vi நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக அரசு இருக்கும். 

Vi நிறுவனம் இந்திய அரசுக்கு 58,000 கோடி ரூபாய் ஏஜிஆர் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. அதில் அரசு அறிவித்த சலுகைகளின் படி தற்போது Vi அதற்கு ஈடான பங்குகளை அளித்துள்ளது. இந்திய டெலிகாம் சந்தையை பொறுத்தவரை ஏர்டெல், ஜியோ மற்றும் Vi என மூன்று தனியார் நிறுவனங்கள் உள்ளன. அது தவிர அரசு நிறுவனமான BSNL நிறுவனமும் டெலிகாம் சேவை வழங்கி வருகிறது. தற்போது செலுத்தப்பட்ட தொகையை தவிர Vi நிறுவனத்திற்கு அரசு, வங்கி என 1.96 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.