வணிகம்

மீண்டும் 1000 ரூபாய் நோட்டை கொண்டு வரும் திட்டமில்லை: நிதியமைச்சகம்

webteam

1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் கொண்டு வரும் திட்டமில்லை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016 நவம்பர் 8 ஆம் தேதியன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. கருப்புப்பண ஒழிப்பு, கள்ள நோட்டு ஒழிப்பு மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு அப்போது தெரிவித்தது.

பின்னர் புதிய 500 ரூபாய் நோட்டுகளும், 2000 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் மத்திய அரசு மீண்டும் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் வந்தன. இந்த செய்தியை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டமில்லை என மத்திய நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.