வணிகம்

வீடு வாங்கினா டெஸ்லா கார் பரிசு... ஆஃபரை அள்ளி வீசிய நிறுவனம்... எங்கே தெரியுமா?

JananiGovindhan

வீடு, நிலம் வாங்குவோருக்கு பொதுவாக கார், ஸ்கூட்டர், தங்கம் உள்ளிட்டவற்றை பரிசாக கொடுக்கப்படும் என ரியல் எஸ்டேட் நிறுவனம் அறிவிக்கும். இது மாதிரியான ஆஃபர்கள் இந்தியாவில்தான் இருக்கும் என்று நினைத்திருந்தால் அது உண்மையில்லை என்பதை நியூசிலாந்தை சேர்ந்த நிறுவனத்தின் மெகா ஆஃபர் மெய்ப்பித்துள்ளது என்றே கூறலாம்.

அதன்படி, நியூசிலாந்தின் ஆக்லாந்தை சேர்ந்த barfoot & thompson என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான ஆஃபரை அறிவித்திருக்கிறது. அதன்படி, 7 படுக்கையறைகள் கொண்ட பங்களா வீட்டை வாங்கினால் புத்தம் புதிய Y மாடல் டெஸ்லா கார் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்புதான் அந்நாட்டு மக்களை வியப்படையச் செய்திருக்கிறது.

டெஸ்லா கார் பரிசாக கொடுக்கப்படும் என அறிவித்ததை அடுத்து, 100க்கும் மேலானோர் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடர்புகொண்டதாக நியூசிலாந்தின் stuff.co.nz செய்தி தளம் மூலம் அறிய முடிகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ற நிறங்களில் டெஸ்லா காரை பெறலாம் என்றும் தெரிகிறது. டெஸ்லா காரின் மதிப்பு 78,243 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 63 லட்சத்து 83 ஆயிரமாகும்.

மேலும், வீட்டை வாங்குவோருக்கு காரை பார்க்கிங் செய்ய எந்த சிரமும் ஏற்படாதபடி தாரளமாக இடம் உள்ளதாகவும், ஏற்கெனவே கார் வைத்திருந்தாலும், டெஸ்லா காரையும் சேர்த்து பார்க் செய்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதுபோக, 1.8 மில்லியன் டாலர் (14 கோடியே 68 லட்சம் ரூபாய்) centralised ac வசதி கொண்ட இந்த பங்களா வீடு கூட்டு குடும்பத்திற்கு அல்லது சிறப்பு விருந்தினர்கள் வந்து தங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும். வீட்டை வாங்குவோர் அதன் ஒரு பகுதியை வாடகைக்கு கூட விட்டுக்கொள்ளும் அளவுக்கு வருமானமும் தரக் கூடும் என barfoot & thompson நிறுவனம் விளம்பரப்படுத்தியிருக்கிறதாம்.

கவர்ச்சிகரமான ஆஃபரின் பின்னணி என்ன?

தீவு நாடான நியூசிலாந்தின் ரியல் எஸ்டேட் சந்தை நிலவரம் ஓராண்டுகளுக்கு மேலாக சரிவை சந்தித்துள்ளதால், இதுப்போன்ற ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்கள். ஏனெனில், ரியல் எஸ்டேட் சந்தையின் தரவுகள் படி, இந்த ஆண்டு அக்டோபரில் விற்கப்பட்ட வீடுகளின் அளவு கடந்த 2021ஆம் ஆண்டின் அதே மாதத்தில் இருந்ததை விட 34.7 சதவீதம் குறைவாக இருந்தாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.