வணிகம்

இலவச வீடியோகேம்களை அறிமுகம் செய்கிறது நெட்ஃபிளிக்ஸ்

நிவேதா ஜெகராஜா

இலவச வீடியோகேம்களை அறிமுகம் செய்ய நெட்ஃபிளிக்ஸ் திட்டமிட்டிருக்கிறது. புதிதாக வரும் சப்ஸ்கிரைபர்களின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால், வீடியோகேம்களில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிகிறது.

2020-ம் ஆண்டு சர்வதேச அளவில் லாக்டவுன் இருந்தது. அதனால் பணம் செலுத்தி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது லாக்டவுன் தளர்த்தப்பட்டிருப்பதால் நெட்ஃபிளிக்ஸ் கணக்கை பலரும் புதுபிப்பதில்லை. கனடா மற்றும் அமெரிக்காவில் 4.30 லட்சம் வாடிக்கையாளர்கள் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் நெட்ஃபிளிக்ஸிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

வெளியேறிய வாடிக்கையாளர்களை கொண்டுவர வீடியோகேம்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது நெட்ஃபிளிக்ஸ். முதலில் மொபைல் வெர்ஷனில் வீடியோகேம் அறிமுகம் ஆகும் எனத் தெரிகிறது. ஆனால், எப்போது இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதை நெட்ஃபிளிக்ஸ் அறிவிக்கவில்லை.

வீடியோகேம்களில் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்வதை மக்கள் விரும்புவார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் வெளியேறும் விகிதம் குறையும் என நெட்ஃபிளிக்ஸ் கருதுகிறது

'வீடியோகேம் என்பது வளர்ந்துவரும் துறை என்பதால், அதில் முதலீடு செய்ய இருக்கிறோம். தற்போதைய சந்தாதாரர்கள் கூடுதலாக எந்தத் தொகையையும் செலுத்த தேவையில்லை. அனிமேஷன், ஒரிஜினல் படங்களைபோல வீடியோகேம்களும் எங்களுக்கு ஒரு கன்டென்ட்தான்' என நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்திருக்கிறது.

மேலும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு வீடியோகேம் துறை ஆண்டுக்கு 21 சதவீத வளர்ச்சி அடையும் என கேபிஎம்ஜி தெரிவித்துள்ளது.