வணிகம்

”பி.எம்.கேர்ஸூக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு உண்டா?” - எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி

நிவேதா ஜெகராஜா

பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் நாடு முழுவதும் திறக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களில், நிதி பி.எம்.கேர்ஸ் என குறிப்பிடப்பட்டிருப்பதை விமர்சித்துள்ளார் எம்.பி. சு.வெங்கடேசன்.

பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் நாடு முழுவதும் இன்று பல்வேறு மருத்துவமனைகளில் 35 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 1.84 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆலையும் உள்ளது. இவை அனைத்தையும் காணொலி வழியாக திறந்து வைத்துள்ளார் பிரதமர் மோடி.

காணொலி வழியாக மோடி திறந்துவைக்கும்போது அங்கு அப்பகுதியின் முக்கிய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அந்தவகையில், இந்த 35 உற்பத்தி மையங்களில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் கொள்கலன்களை நேரில் சென்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்திருந்தார் எம்.பி. சு. வெங்கடேசன். அவருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மருத்துவமனை டீன் ரத்தினவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.கோ.தளபதி, மு.பூமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

திறந்த வைத்த பின் அதுகுறித்து ட்வீட் செய்த சு.வெங்கடேசன், அதில் “திறந்து வைத்த கொள்கலன்களில் பி.எம்.கேர்ஸ் நிதி என்றும், அதன் கீழே மத்திய அரசு என்றும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் #PMcare க்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய அரசு கூறியிருக்கிறது. ஆனால் எழுத்தில் வேறுபோல உள்ளது. திறந்துவைத்த எங்களுக்கும் இது குழப்பமாகவே இருக்கிறது. உண்மையில் இது யாருடைய நிதி? விளக்கம் தருமா மத்திய அரசு?” எனக்கூறி விமர்சித்துள்ளார்.