வணிகம்

திண்டாட்டத்தில் கிரிப்டோ கரன்ஸிகள்!

திண்டாட்டத்தில் கிரிப்டோ கரன்ஸிகள்!

webteam

கடந்த ஒரு மாதமாகவே திண்டாட்டத்தில் இருந்து வரும் பிட்காயின் உள்ளிட்ட, கிரிப்டோ கரன்ஸிகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனது பட்ஜெட் உரையில், கிரிப்டோ கரன்ஸி எனும் டிஜிட்டல் நாணய வகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது, இந்திய கிரிப்டோ கரன்ஸி முதலீட்டாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. அதனால், பட்ஜெட் நாளில், இந்த நாணயங்கள் பலவும் 10 சதவீதத்துக்கும் அதிக சரிவில் உள்ளன. 

கிரிப்டோ நாணயங்களில் மிக பிரபலமான பிட்காயின், கடந்த டிசம்பர் மாத வாக்கில் 1 பிட்காயினுக்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற மதிப்புக்கு உயர்ந்தது. ஆனால், தற்போது அதன் மதிப்பு பாதிக்கு மேல் வீழ்ச்சி கண்டு, 9 ஆயிரத்தை ஒட்டி இறங்கியுள்ளது. அதேபோல, ரிப்பிள் என்ற பெயரில் இருந்த கிரிப்டோ நாணயமும் கடந்த ஒரு நாளில் மட்டும் 10 சதவீதத்துக்கும் மேல் இறக்கம் கண்டுள்ளது. 

கடந்த ஆண்டில்தான், உலக அளவிலேயே இந்த நாணயங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. ஆனால், இந்தியாவில் மட்டுமின்றி, சீனா உள்ளிட்ட சில நாடுகளிலும் இதற்கு எதிரான கருத்துகள், அரசு நிர்வாகத் தரப்பில் இருந்து வெளியாகி வருவதால், இந்தத் தொடர் சரிவு தவிர்க்க முடியாததாக உள்ளது. தீவிரவாத நடவடிக்கைகள் உள்ளிட்ட, பல முறைகேடான செயலில் ஈடுபடுபவர்கள் இந்த வகையில் கணிசமான வருவாய் ஈட்டி வருவதாகச் சொல்லப்படும் நிலையில், வரும் நாட்களில் மேலும் பல நாடுகளும் இந்த நடைமுறைக்கு எதிராக இறங்க வாய்ப்புகள் உள்ளன. அரசுகள் மட்டுமின்றி, பேஸ்புக் உள்ளிட்ட சில நிறுவனங்களும், இந்த கிரிப்டோ கரன்ஸி விளம்பரங்கள் வெளியிடுவதை தவிர்க்கும் முயற்சியில் உள்ளதால், இந்த கிரிப்டோ கரன்ஸிகளின் எதிர்காலம் மங்கி வருவதாக இத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.