வணிகம்

மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் குறைவு

மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் குறைவு

Rasus

உட்கட்டமைப்பு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடனைத் திரும்பப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 21.26‌ சதவீதம் குறைந்துள்ளதாக அதன் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் செயல்பாடுகள் குறித்து 2016-17 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைவர் எஸ்.அண்ணாமலை கூறும்போது, கடந்த 2016-17 ஆம் ஆண்டில் ரூ. 54 ஆயிரத்து 164 கோடி வணிகம் செய்துள்ளதாகவும் இது கடந்த நிதியாண்டைவிட 2.30 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், முன்னுரிமை துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் ரூ. 12 ஆயிரத்து 960.75 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கான 40 சதவீததை விட 55.25 சதவீதமாக உள்ளதாக தெரிவித்தார். 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 21.26 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இதற்கு காரணம் உள்கட்டமைப்பு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை திரும்ப பெறுவதில் சிக்கல் காரணமாக நிகர லாபம் குறைந்துள்ளதாக தெரிவித்தார். 
இது குறித்து கேள்வி எழுப்பியபோது, பணமதிப்பு இழப்பு காரணமாக கடன் திருப்பி பெறுவதில் பிரச்சினை உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி 2017-18 ஆம் ஆண்டில் புதிதாக இ-லாபி மையங்கள் அமைப்பது, நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொகை வளர்ச்சியினை அதிகரிப்பது. சில்லறை மற்றும் விவசாயத்திற்கு கடன்கள் வழங்குவது உள்ளிட்டவை முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.