பங்குச்சந்தைகள் மீண்டும் எப்போது எழும் என்பதே பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களின் ஒரே கவலையாக இருக்கிறது. உயர்ந்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப நம்மிடம் எதிர்காலத்தில் பணம் தங்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி பங்குசந்தை முதலீடு தான் பலரும் நம்புவதால், அதில் மக்கள் முதலீடு செய்கின்றனர். ஆனால், கடந்தாண்டு செப்டம்பர் மாதம், கீழ் இறங்கத் தொடங்கிய பங்குச்சந்தை அதற்கு பின்னர் மீளவே இல்லை. இந்திய பங்குச்சந்தையில் multibagger பங்குகளை சரியாகக் கணித்து பெரும் பணக்காரர் ஆனவர் விஜய் கேடியா. ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில், அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் உரையாடியதில் இருந்து,
இந்த நிலை எப்போது மாறும்..?
கொரோனாவுக்குப் பிறகு இந்த மார்க்கெட் உயர்ந்துகொண்டே இருந்தது. ஆனால், மார்க்கெட் என்பது அவ்வப்போது விழ வேண்டும். வாழ்க்கையைப் போலத்தான் மார்க்கெட்டும். ஏற்றமும் இறக்கமும் அதன் இயல்பு. நமது உடலைப் போலத்தான் சில நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் போகும்; சில நாட்கள் அதீத எனெர்ஜியுடன் இருக்கும். மார்க்கெட் எப்போதெல்லாம் அதிகமாக உயர்கிறதோ, அப்போதெல்லாம் இப்படியான இறக்கங்களையும் நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். மீண்டும் மார்க்கெட் காளைகளிடம் செல்லும். இந்தத் தருணத்தை முதலீடுக்கான காலமாக பார்க்க வேண்டும். நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த குறுகிய கால வீழ்ச்சியை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
நீண்ட கால முதலீட்டாளர்களைவிட ஸ்விங் டிரேடர்கள் அதிக லாபம் அடைய முடியுமா..?
என்னைப் பொறுத்தவரை அது இயலாத காரியம். இத்தனை ஆண்டுகால மார்க்கெட் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். ஒரு நாளும் ஸ்விங் டிரேடர்களால், நீண்ட கால முதலீட்டாளர்களைவிட லாபம் பார்க்க முடியாது. ஆனால், ஸ்விங் டிரேடை நம்பித்தான் பலரும் பணத்தை இழக்கிறார்கள். SEBIயும் மீண்டும் மீண்டும் அதைத்தான் எச்சரிக்கிறது. இந்த மார்க்கெட்டில் சக்ஸஸ் ரேட் என்பது மிகக்குறைவு. குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்த்துவிட வேண்டும் என நினைப்பது சிக்கலுக்குத்தான் வழிவகுக்கும். ஷார்ட் டெர்ம், ஸ்விங் டிரேட், F&O இதெல்லாம் தான் மக்கள் பெரும்பாலும் பணத்தை இழப்பதற்கான காரணங்கள்
சோலார் எனெர்ஜி பங்குகள் பெரும் அளவில் சரிந்து இருக்கின்றன. டிரம்ப்பின் பொருளாதார கொள்கைகள் தான் காரணமா.?
டிரம்ப் என்பது வெறும் சாக்கு தான். சோலார் பங்குகள் 15x,20x உயர்ந்தன. ஆனால், அதில் எந்த லாஜிக்கும் இல்லை. சோலார், பவர், லித்தியம் என பெயர் வைத்த எல்லாமே 10 மடங்கு வளர்ந்தன. இப்படியான ஆச்சர்யங்கள் அவ்வப்போதுதான் நடக்கும், மீண்டும் மீண்டும் நடக்காது.
Youtubeஐத் திறந்தாலே SIP செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என்று தான் வீடியோக்கள் சொல்கின்றன. உண்மையில் இதுவொரு நல்ல முதலீட்டு ஐடியாவா?
மார்க்கெட்டில் பணத்தைப் பெருக்குவதைவிட முக்கியம், நீங்க முதலீடு செய்த பணத்தைப் பாதுகாப்பது. உங்களிடம் கார் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், உங்களுக்கு கார் ஓட்டத் தெரியாது. அப்போது நீங்களே ஓட்ட வேண்டும் என்று முடிவு செய்தால், அது விபத்தில் கொண்டு போய் தான் முடியும். பங்குச் சந்தை பற்றிய தெளிவு இல்லாதவர்களுக்கான ஒரே ஆப்சன் மியூச்சுவல் ஃபண்ட் தான். அதைத்தவிர வேறு வழியில்லை என்னும் போது SIP தான் ஒரே வழி.
ஒரு பங்கை வாங்கும் போது என்ன என்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்.?
புல் மார்க்கெட்டில் எல்லோருமே ஜீனியஸ் தான். நானும் அப்படித்தான் . பங்குச்சந்தையை முதலீடாகப் பாருங்கள். சூதாட பயன்படுத்தாதீர்கள். பங்குச்சந்தையை வைத்து சூதாடலாம் என நீங்கள் நினைத்தால், நிச்சயமாக சூது ஒரு நாள் கவ்வும். ஐந்து நாளில் இரண்டு மடங்கு லாபம் வர வேண்டும் என நினைக்காதீர்கள். நீண்ட கால முதலீட்டு திட்டத்துடன் வாருங்கள். நிச்சயமாக பங்குச் சந்தையில் லாபம் பார்க்கலாம்.