செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்
பால், நெய், சோப்பு, சிலிண்டர் என அன்றாடப் பொருட்களின் விலை இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளன. இதனுடன், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (Commercial LPG) மற்றும் எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பணவீக்க அழுத்தம் அதிகரித்து, நாடு முழுவதும் குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பட்ஜெட் எகிறியுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கடந்த அக்டோபர் 28, 2026 முதல் 63 வகையான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலையை 10% முதல் 25% வரை உயர்த்தியுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்த விலை உயர்வில் நெய், வெண்ணெய், தயிர், லஸ்ஸி, மில்க் ஷேக், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், வழக்கமான பாக்கெட் பாலின் விலை உயர்த்தப்படவில்லை.
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாகப் பால் நிறுவனங்கள், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் (FMCG) நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் தங்களது பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன. அமுல் (Amul) மற்றும் மதர் டெய்ரி (Mother Dairy) நிறுவனங்கள் நவம்பர் 12 முதல் ஒரு லிட்டர் பாலின் விலையை ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளன. இதுதவிர, நெய், வெண்ணெய், சலவைத் தூள் மற்றும் சோப்பு ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் (Hindustan Unilever) நிறுவனம் சர்ஃப் எக்செல் (Surf Excel), ரின் (Rin), வீல் (Wheel) உள்ளிட்ட தனது பிராண்டுகளின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது.
ஐடிசி (ITC) நிறுவனமும் கோல்டு ஃப்ளேக் பிரீமியம் (Gold Flake Premium) சிகரெட்டின் விலையை உயர்த்தியுள்ளது. 10 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை ரூ.10 அதிகரித்து, தற்போது ரூ.135 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஜூன் மாதத்திலும் கோல்டு ஃப்ளேக் பிரீமியம் சிகரெட்டின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் நடப்பு ஆண்டில் மட்டும் இந்தச் சிகரெட்டின் விலை மொத்தம் ரூ.20 அதிகரித்துள்ளது.
டெல்லியில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மொத்தம் ரூ.72.50 உயர்ந்துள்ளது. இதனால், அதன் தற்போதைய விலை ரூ.2,820 ஆக அதிகரித்துள்ளது.
விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஏவியேஷன் டர்பைன் ஃபியூல் (Aviation Turbine Fuel - ATF) எனப்படும் எரிபொருளின் விலையும் தொடர்ந்து நான்கு மாதங்களாக உயர்ந்து வருகிறது. இதனால் விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளன.
அன்றாட நுகர்வோர் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளதன் எதிரொலியாக, உலர் பழங்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இத்தகைய தொடர் விலை உயர்வுகள் இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டிலும், பல்வேறு வணிக நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.