புத்தாண்டின் முதல் நாளில், மத்திய அரசு சிகரெட் மீதான கலால் வரியை உயர்த்தியதைத் தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தையில் புகையிலை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி கண்டன. ITC மற்றும் காட்ஃபிரே பிலிப்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன. புதிய வரி விதிமுறைகள் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும்.
புத்தாண்டின் முதல் நாளான இன்று, பலரும் சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என முடிவு எடுப்பார்கள். ஆனால், அவர்களே ஷாக் ஆகும் அளவுக்கு புகையிலை பொருட்களை விற்கும் இந்திய அளவிலான பங்குகள் வீழ்ச்சி கண்டிருக்கின்றன.
மத்திய அரசு சிகரெட் மீது புதிய கலால் வரியை (Excise Duty) விதித்ததைத் தொடர்ந்து, பங்குச்சந்தையின் முதல் நாளான இன்று வர்த்தகத்தில் புகையிலை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன.
நிஃப்டி 50 (Nifty 50) குறியீட்டில், ஐடிசி (ITC) பங்குகள் 9 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்து ரூ.365.10 ஆகக் குறைந்து வர்த்தகமாகி வருகிறது. புகையிலை பொருட்கள் விற்பனையில் அசுர வளர்ச்சி கண்ட காட்ஃபிரே பிலிப்ஸ் இந்தியா (Godfrey Phillips India) நிறுவனத்தின் பங்குகள் 16 சதவீதம் சரிந்து ரூ.2,319.50 ஆக வர்த்தகமாகிக்கொண்டிருக்கின்றது.
சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் மீதான வரியை கடுமையாக உயர்த்துவதற்கு வழிவகுக்கும் 'மத்திய கலால் (திருத்தம்) மசோதா, 2025'-க்கு நாடாளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. இது சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான வரியை மொத்தமாக மாற்றியமைக்க இருக்கின்றது.
40 சதவீத ஜிஎஸ்டி (GST) உடன் கூடுதலாக சிகரெட்டுகள் மீது இந்த கலால் வரி விதிக்கப்படும். சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து, 1,000 குச்சிகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரையிலான கலால் வரி பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் 18 ரூபாய்க்கு விற்ற சிகரெட்டின் விலை 72 வரை உயரும் என ஊடகங்களில் கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், அந்த அளவுக்கு உயராது என்றும், அப்படி ஒருவேளை உயர்ந்தால் அது சீனா புகையிலை பொருட்களுக்கும், கள்ளச் சந்தைக்குமே வழிவகுக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்தியாவில் சிகரெட் மீதான மொத்த வரி தற்போது சில்லறை விலையில் சுமார் 53 சதவீதமாக உள்ளது. தற்போதைய வரியில், 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் சிகரெட்டுகளின் அளவை அடிப்படையாகக் கொண்ட கூடுதல் வரி ஆகியவை அடங்கும்.