Modi | Trump | India-US trade deal India US Trade Deal
மார்க்கெட்

India-US trade deal | இன்று இரவு கையெழுத்தாகிறதா..?

இந்திய அமெரிக்க இடையிலான சிறிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சில அமெரிக்க தொழில்துறை பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் பூஜ்யமாக்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் யூகிக்கிறார்கள்.

PT digital Desk

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் சிறு பகுதி இன்று இரவு 10 மணிக்கு கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது.  இரு நாடுகளும் இன்று இந்த ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளதை அறிவிப்பார்கள்; ஆனால் முழு விவரங்கள் பின்னர் வெளியிடப்படலாம் என்று CNBC-Awaaz தெரிவித்திருக்கிறது. 

அமெரிக்கா முன்பே அறிவித்திருந்த 10 சதவீத அடிப்படை இறக்குமதி வரிகள் இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகும் தொடரும். ஆனால், துணி, ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் போன்ற துறைகளுக்கு வரி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏப்ரல் மாதத்தில் தடாலடியாக பல வரிகளை அறிவித்திருந்தார். பின்னர், 90 நாட்களுக்கு அந்த வரிகளை இடைநிறுத்தி, நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய நேரம் வழங்கினார். அப்போதே, மீண்டும் இது மாதிரியிலான சலுகைகளை டிரம்ப் வழங்குவார் என பேசப்பட்டது. ஆனால், நேற்று சில நாடுகளுக்கு வரிகளை விதித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.  ஜூலை 7 அன்று டிரம்ப் 14 நாடுகளுக்கு புதிய வரி விகிதங்களை குறித்த கடிதங்களை அனுப்பினார். இந்த புதிய இறக்குமதி வரிகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும். மேலும், இந்த மாதம் மேலும் பல நாடுகளுக்கு இத்தகைய கடிதங்கள் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாடுகளை அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய தூண்டும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். 

சில நாடுகளுக்கு வரியை அறிவித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த , " இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்வதில் நாங்கள் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். சீனாவுடனும் ஒப்பந்தம் செய்துவிட்டோம். மற்ற நாடுகளுடன் சந்தித்து, ஒப்பந்தம் செய்ய முடியாது என்று நினைத்தால், அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறோம். எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதைக் கூறும் கடிதங்களை பல நாடுகளுக்கு அனுப்புகிறோம். சிலர் காரணம் சொன்னால், சிறிது மாற்றம் செய்யலாம்; நாங்கள் அநியாயமாக நடக்க மாட்டோம்" என்று அறிவித்தார்.

இந்திய அமெரிக்க இடையிலான சிறிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சில அமெரிக்க தொழில்துறை பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் பூஜ்யமாக்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் யூகிக்கிறார்கள். நாளை பங்குச்சந்தையில் இவை நிச்சயம் எதிரொலிக்கக்கூடும்.