BLACK MONDAY stock market crash Grok
மார்க்கெட்

BLACK MONDAY... 22% சரிவு... பங்குசந்தை இந்த வாரம் என்ன ஆகும்..?

1987ல் நிகழ்ந்த BLACK MONDAY போல், இந்தத் திங்களும் ஒரு கறுப்பு தினமாக மாறக்கூடும் என எச்சரித்திருக்கிறார்.

karthi Kg

பங்குச்சந்தைகளுக்கு இது போதாத காலம். ஒருவேளை கமலா ஹாரிஸ் ஆட்சியமைத்துவிட்டால் , பங்குச்சந்தை முதலீடு எல்லாம் காலி ஆகிவிடும். நீங்கள் எல்லாம் தெருவுக்கு வந்துவிடுவீர்கள் என பூச்சாண்டி காட்டி தேர்தலில் வென்றவர், இன்று அதே மக்களை போராட வீதிக்கு வர வைத்திருக்கிறார். ஆம், டொனால்டு டிரம்ப் கமலா ஹாரிஸ் குறித்து இப்படியெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார். MAKE AMERICA GREAT AGAIN என சொல்லி பரஸ்பர வரி விதிப்புகள் அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆனால், அது மற்ற பங்குச் சந்தைகளைவிட அமெரிக்க பங்குச்சந்தையையே கடுமையாக பாதித்திருக்கிறது. ஒரே நாளில் 6% அவுட். சர்க்கஸ் துப்பாக்கி பின்னாடியும் சுடும் என்பது போல் அமெரிக்காவிலேயே மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமெரிக்க பங்குச்சந்தை அளவுக்கு இல்லையென்றாலும், இந்திய பங்குச்சந்தையும் கடந்த வெள்ளியன்று லைட்டாக டமால் என விழுந்தது. ஆனால், இந்த வாரம் அடி சற்று பலமாகவே இருக்கும் என எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி பரஸ்பர வரி விதிப்பை அறிவித்திருந்தாலும், அது இந்த வாரம் 9ம் தேதி தான் நடைமுறைக்கு வரவிருக்கிறது. சீனா போன்ற நாடுகள் ஏற்கெனவே, அமெரிக்காவுக்கு போட்டியாக இன்னொரு வரி விதிப்பை அறிவித்திருக்கிறார்கள். அதே சமயம், இந்தியா இதுவரை எதுவும் ஏட்டிக்குப் போட்டியாக செய்யவில்லை. கடந்த சில வாரங்களாகவே மத்திய அரசு அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். பேச்சுவார்த்தைக்கு வரும் நாடுகளுக்கு டிரம்ப் சலுகை காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் பங்குச்சந்தைகள் கீழ் நோக்கி செல்லவே வாய்ப்பதிகம் என்பதால் மிகவும் கவனத்துடன் பங்குச்சந்தை முதலீடுகளை செய்ய வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த வாரம் முதல் மூன்று நாட்கள் மிக முக்கிமானவை. ஏனெனில் ஒரு வேளை, எதுவும் சரியாக அமையாமல், புதன்கிழமை அதாவது 9ம் தேதி அமெரிக்கா இந்த வரி விதிப்பை அமல்படுத்தினால், அதற்கேற்றார் போல் பங்குச்சந்தைகளில் பாதிப்பு இருக்கும். ஒருவேளை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு வரி விதிப்பை டிரம்ப் தள்ளி வைத்தால், ஆசுவாசப்படுத்திக்கொள்ள கொஞ்சம் அவகாசம் கிடைக்கும். நீண்ட கால முதலீட்டாளர்கள் இதை ஒரு சூப்பர் வாய்ப்பாக எடுத்துக்கொண்டு முதலீடு செய்வார்கள் என்பதே கடந்த கால வரலாறு.

அமெரிக்க பங்குச்சந்தைகளில் பிரபலமான ஜிம் கிரேமர் வேறு இந்த திங்கள் கறுப்பு திங்களாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. 1987ல் நிகழ்ந்த BLACK MONDAY போல், இந்தத் திங்களும் ஒரு கறுப்பு தினமாக மாறக்கூடும் என எச்சரித்திருக்கிறார். 1987ம் ஆண்டு அக்டோபர் 19யைத்தான் அமெரிக்காவில் கறுப்பு திங்கள் நாள் என அறிவிக்கிறார்கள். அன்று ஒரே நாளில் அமெரிக்காவின் dow jonesல் 22.6% பங்குகள் சரிந்து 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் பங்குச்சந்தை எப்படி இருக்கப்போகிறது என நீங்கள் நினைப்பதை கமெண்ட்டில் தெரிவியுங்கள்