வணிகம்

ஆடம்பர, சொகுசுக் கார்களின் விலை உயர்கிறது

webteam

ஆடம்பர, சொகுசுக் கார்கள் மீதான செஸ் வரியை உயர்த்துவது தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி கவுன்சில் குழு பல்வேறு கட்டங்களாக கூடி பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை முடிவு செய்து வந்தது. பெரும்பாலான பொருட்கள் மீதான வரிகள் முடிவு செய்யப்பட்ட நிலையில், ஜி.எஸ்.டி. வரி கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இருப்பினும், மீதமுள்ள பொருட்களுக்கு வரிகளை முடிவு செய்வது தொடர்பாக ஜி.எஸ்.டி கவுன்சில் தொடர்ந்து கூடி ஆலோசனை செய்து வருகிறது.

இந்நிலையில், ஆடம்பர கார்கள் மற்றும் விளையாட்டில் பயன்படுத்தப்படும் சொகுசுக் கார்களுக்கு செஸ் வரியை உயர்த்த மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆடம்பர, சொகுசுக் கார்களின் மீதான செஸ் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவது தொடர்பான அவசரச் சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த வரி உயர்வு அமல்படுத்தும் தேதியை செப்டம்பர் 9 ஆம் தேதி ஹைதராபாத் நகரில் கூடும் ஜி.எஸ்.டி கவுன்சில் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, ஜூலை 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி மூலம் ஆடம்பர, சொகுசுக் கார்களின் விலை மிகவும் குறைந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் செஸ் வரி உயர்வு முடிவால் ஆடம்பர கார்களின் விலை உயர உள்ளது.