வணிகம்

'ஒரு நாளைக்கு ரூ.1,002 கோடி' - அம்பானியை விட ஜெட் வேகத்தில் உயரும் அதானி சொத்து மதிப்பு

கலிலுல்லா

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். அந்த வகையில் இந்தாண்டும் அவரே முதலிடத்தில் இருக்கிறார்.

'ஐ.ஐ.எஃப்.எல் வெல்த் ஹுரூன் இந்தியா' என்ற அமைப்பு இந்தியாவின் 2020ம் ஆண்டுக்கான டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பானது, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ள இந்திய பணக்காரர்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, ₹7,18,000 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார் முகேஷ் அம்பானி. 5,05,900கோடி ரூபாயுடன் கவுதம் அதானி 2 வது இடத்தில் உள்ளார். HCL இன் ஷிவ் நாடார் 2,36,600 கோடியுடன் 3 வது இடத்தில் உள்ளார்.

எஸ்பி ஹிந்துஜா & பேமிலி மற்றும் எல்என் மிட்டல் முறையே 4 மற்றும் 5 வது இடங்களைப் பெற்றுள்ளனர். சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனாவல்லா 1,63,700 கோடியுடன் 6 வது இடத்தில் உள்ளார்.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் முகேஷ் அம்பானியின் வளர்ச்சி 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதேபோல ஒருநாளில் அவர் ஈட்டும் வருமானம் 163 கோடி மட்டுமே. ஆனால், இரண்டாம் இடத்தில் இருக்கும் கௌதம் அதானி மற்றும் குழுமத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. நாள் ஒன்றுக்கு அதானி குழுமம் ஈட்டும் வருமானம் 1,002 கோடி. அதேபோல கடந்த ஆண்டை காட்டிலும் 261சதவீதம் கூடுதல் வளர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த பட்டியலில் 8வது இடத்தில் உள்ள வினோத் சாந்திலால் அதானி குழமத்தின் வளர்ச்சியும் 212 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த பட்டியலிலேயே நாள் ஒன்றுக்கு அதிக வருமானம் ஈட்டுவதிலும், கூடுதல் வளர்ச்சியிலும் முன்னிலையில் இருக்கிறது கௌதம்அதானி குழுமம்.

இந்தியாவில் 1007 தனிநபர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளார்கள். கடந்த ஆண்டை விட 179 பேர் அதிகரித்துள்ளனர். முதல் முறையாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.இந்தப் பட்டியலில் உள்ள பணக்காரர்கள் ஒவ்வொரு நாளும் ரூ2020 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகிறார்கள். இது கடந்த 10 ஆண்டுகள் அதிகமான வளர்ச்சி

முழு பட்டியலையும் அறிய: https://www.hurunindia.net/irl-2021?utm_campaign=fullarticle&utm_medium=referral&utm_source=inshorts