நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல கார் நிறுவனமான லைட் இயர் ஒன் நிறுவனம் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய அதிநவீன காரை அறிமுகப்படுத்தி உள்ளது.
லைட் இயர் ஒன் நிறுவனம் சூரிய சக்தி மூலம் இயங்கும் கார் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. விசித்திர தோற்றம் மற்றும் வித்தியாசமான செயல்திறனுடன், சீறிப்பாயும் அந்தக் கார்களுக்கு பெட்ரோல், டீசலே தேவையில்லை. சூரிய சக்தி மூலசோம் இந்தக் கார்களில் உள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும். தொடர்ச்சியாக 725 கிலோ மீட்டர் பயணிக்கும் திறன் பெற்ற இந்த கார், ஆண்டுக்கு 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும்.
கார்களின் கூரைகளின் மேல் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் இந்தப் பயணம் சாத்தியம் எனக் கூறுப்படுகிறது. சூரிய ஒளி தகடுகள் பகல் முழுவதும் கிடைக்கும் வெப்பத்தின் ஒளியிலிருந்து, தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும் திறன் கொண்டவை என இந்தக் காரை தயாரித்த லைட் இயர் ஒன் நிறுவனத்தினர் கூறுகின்றனர். மேலும் வெயில் குறைவான நேரங்களில் அல்லது மழை நேரங்களில் பயணம் செய்ய மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இந்த காரில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தக் கார்கள் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என்றும் லைட் இயர் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கார்களுக்கான புக்கிங் லைட் இயர் நிறுவனத்தின் இணையதளத்தில் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. சூரிய சக்தி மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் இந்தக் கார்களின் விலை இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.