வணிகம்

புலம்பும் குமார் மங்கலம் பிர்லா... மீளுமா 'வோடபோன் - ஐடியா' நிறுவனம்?

நிவேதா ஜெகராஜா

ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் இந்திய டெலிகாம் சந்தையில் பெரும் சந்தையை வைத்திருக்கின்றன. மூன்றாவது நிறுவனமான 'வோடபோன் - ஐடியா' இருக்கிறது. ஆனால், இந்த நிறுவனம் தற்போது பெரும் சிக்கலில் உள்ளது. சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனத்துக்கு கடன் உள்ளது.

இந்த நிலையில், புதிதாக நிதி திரட்டவில்லை எனில், 'வோடபோன் - ஐடியா' நிறுவனம் மாபெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும் எனத் தெரிகிறது. இந்த நிறுவனம் தொடர்ந்து 11 காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வசம் 36.2 சதவீத வாடிக்கையாளர்களும், ஏர்டெல் நிறுவனத்தின் வசம் 29.8 சதவீத வாடிக்கையாளர்களும் 'வோடபோன் - ஐடியா' வசம் 23.8 சதவீத வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட புதிய நிறுவனம்தான் 'வோடபோன் - ஐடியா'. இந்த நிறுவனத்தில் வோடபோனுக்கு 44 சதவீத பங்குகளும், ஐடியா நிறுவனத்துக்கு (ஆதித்யா பிர்லா குழுமம்) 27 சதவீத பங்குகளும் உள்ளன.

இந்த நிறுவனத்தில் செய்துள்ள முதலீட்டை வோடபோனின் தாய் நிறுவனம் ரைட் ஆஃப் செய்துவிட்டது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் மேலும் முதலீடு செய்ய விரும்பவில்லை. சந்தையில் நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்டது. ஆனால், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்பவில்லை.

இந்திய சந்தையில் மூன்று டெலிகாம் நிறுவனங்கள் இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறதா என்பதை அறிந்துகொள்ள இதன் முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள்.

இந்த நிலையில், மத்திய அரசுக்கு குமார் மங்கலம் பிர்லா கடிதம் எழுதி இருக்கிறார். 'அரசாங்கத்தின் உதவி இல்லாமல் வோடபோன் - ஐடியாவை மீட்க முடியாது. இந்த நிறுவனத்தில் 27 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்கான ஆதித்யா பிர்லா குழுமத்தின் வசம் இருக்கும் பங்குகளை யாருக்கு வேண்டுமானாலும் வழங்குகிறோம். அரசு, பொதுத்துறை நிறுவனம், தனியார் நிறுவனம் அல்லது எந்த நிறுவனத்துக்கும் வழங்க இருக்கிறோம். பொது நலனுக்காக அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்' என்று அந்தக் கடிதத்தில் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்திருக்கிறார்.

ஜூலை 21-ம் தேதி எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்திருக்கிறார். இரு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு தொலைத்தொடர்பு துறை செல்கிறதா அல்லது வோடபோன் - ஐடியாவை மீட்க முடியுமா என்பது இப்போது தொக்கி நிற்கும் கேள்வியாக இருக்கிறது.