வணிகம்

முதல் நாள் வர்த்தகத்தில் கல்யாண் ஜுவல்லரி 15% சரிவு; குறைகிறதா ஐபிஓ-க்களின் உற்சாகம்?

webteam

சில நாள்களுக்கு முன்பு கல்யாண் ஜுவல்லரி நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியானது. இந்தப் பங்குகளுக்கு 2.61 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. ஆனால், இன்று (மார்ச் 26) பங்குச்சந்தையில் முதல் நாள் வர்த்தகத்தை தொடங்கியது. முதல் நாள் வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்துகாக பலரும் முதலீடு செய்தனர். தவிர, பல பங்குச்சந்தை நிறுவனங்கள் இந்த ஐபிஓவில் முதலீடு செய்யலாம் என பரிந்துரை செய்தனர். ஆனால், முதல் வர்த்தக நாளில் 15 சதவீதம் அளவுக்கு சரிந்தது.

87 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்ட கல்யாண் ஜுவல்லரி பங்கு 15 சதவீதம் சரிந்து 73.90 ரூபாய் அளவுக்கு வர்த்தகத்தை தொடங்கியது.

பிப்ரவரி மாத உச்சத்தில் இருந்து பங்குச்சந்தை 7 சதவீதம் அளவுக்கு சரிந்தது. தவிர, கோவிட் இரண்டாம் அலை அச்சுறுத்தல் தொடங்கி இருக்கிறது என கருதும் சூழ்நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற தொடங்கி இருக்கிறார்கள். இதனால் பங்குச்சந்தை சரியத்தொடங்கி இருக்கிறது.

மேலும், இன்றைய வர்த்தகத்தில் சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி பங்கும் இன்று வர்த்தகத்தை தொடங்கியது. இந்தப் பங்கும் முதல் நாளில் சரிந்தே வர்த்தகத்தை தொடங்கியது. இந்த பங்கும் 8 சதவீதம் அளவுக்கு வர்த்தகமாகி வருகிறது. இந்த பங்கின் ஐபிஓவுக்கு 2.37 மடங்கு அளவுக்கு முதலீடு வந்திருந்தது. ஆனால், இன்று வர்த்தகத்தை தொடங்கிய இரு பங்குகளும் சரிந்து வர்த்தகத்தை தொடங்கி இருக்கின்றன.

நேற்று முதல் நாள் வர்த்தகத்தை தொடங்கிய கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமெஷன் பங்கும் சரிந்தே வர்த்தகத்தை தொடங்கியது. நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட 9 சதவீதம் அளவுக்கு குறைந்தது. அதேபோல அனுபம் ராஷ்யம் (Anupam Rasayan) நிறுவனத்தின் பங்கும் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட குறைந்தே வர்த்தகமாகிறது.

கடந்த சில நாள்களில் 4 ஐபிஓகள் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்திருக்கின்றன. இந்த நிலையில், வரும் வாரங்களில் பல ஐபிஓ-கள் வர இருக்கின்றன. ஐபிஓகளின் முதல் நாள் லாபம் முடிவுக்கு வந்ததா என்பது வரும் வாரங்களில் தெரியும்.