வணிகம்

விவசாயிகள் போராட்டம்: இரு மாநிலங்களில் ஜியோ இழந்ததும்; ஏர்டெல், வோடபோன் பெற்றதும்!

webteam

டெல்லியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் விவசாயிகள் போராட்டம், மத்திய அரசு மற்றும் ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகளுக்கு எந்த அளவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதோ, அதுபோலவே இந்தியாவின் டாப் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களின் பொருட்களை தவிர்த்து வருகின்றனர். இதை ஓர் இயக்கமாக முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் சில இடங்களில் ஜியோ டவர்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த விவகாரம் அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து, விவசாயிகளின் எதிர்ப்பை பயன்படுத்தி ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் விவசாயிகளை தங்கள் பக்கம் இழுக்கும் செயல்களில் இறங்கியுள்ளதாக ஜியோ சார்பில் ட்ராய் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது.

டெலிகாம் ஆபரேட்டர்களின் டிசம்பர் 2020 தரவு, விவசாயிகள் போராட்டத்தால் ஜியோ சந்தித்த இழப்பை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த தரவில், "ஜியோ நவம்பர் மாதம் ஹரியானாவில் 94.48 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது, இது டிசம்பரில் 89.07 லட்சம் ஆக குறைந்தது. மறுபுறம், ஏர்டெல் நவம்பர் மாதம் ஹரியானாவில் 49.56 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது; இது டிசம்பரில் 50.79 லட்சம் ஆக கூடியுள்ளது. வோடபோன் - ஐடியாவில் 80.23 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் இருந்தனர், இது 80.42 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.

பஞ்சாபில் ஜியோ நவம்பர் மாதம் 1.40 கோடி சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது; இது டிசம்பரில் 1.24 கோடியாகக் குறைந்தது. வோடபோன் - ஐடியா நவம்பரில் 86.42 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது; இது டிசம்பரில் 87.11 லட்சமாக அதிகரித்தது, ஏர்டெல் 1.05 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது; இது 1.06 கோடியாக அதிகரித்துள்ளது.

ஜியோ இழந்த வாடிக்கையாளர்களை ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் மட்டும் கவரவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் இதன்மூலம் தனது வாடிக்கையாளர்களை அதிகரித்துள்ளது. அரசு நடத்தும் பிஎஸ்என்எல் டிசம்பர் மாதத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டிலும் சந்தாதாரர்களை அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) மற்றும் அதானி குழுமம் போன்ற பெருவணிக குழுக்களுக்கு மோடி அரசு ஆதரவளித்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஹரியானா மற்றும் பஞ்சாபில் பரந்த அளவிலான நிலங்களை வாங்குவதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன; அங்கு அவர்கள் ஒப்பந்த விவசாயத்தை மேற்கொள்வதற்கும் தனியார் மண்டிகளை அமைப்பதற்கும் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆர்ஐஎல் மற்றும் அதானி குழுமம் இரு தரப்புமே குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.