வணிகம்

நாடு முழுவதும் ஒரே அளவிலான ஜிஎஸ்டி சாத்தியமா? பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன?

நாடு முழுவதும் ஒரே அளவிலான ஜிஎஸ்டி சாத்தியமா? பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன?

webteam

நாடு முழுவதும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஒரே அளவிலான வரி விதிக்கப்படும் என்றும் பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே அளவிலான ஜிஎஸ்டி வரி சாத்தியப்படுமா? 

ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்‌படையில் பாரதிய ஜனதா அரசு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை அறிமுகம் செய்தது. ஐந்து அளவுகளில் அமல்படுத்தப்பட்ட இந்த ஜிஎஸ்டி வரிக்கு நாடு முழுவதும் வணிகர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து படிப்படியாக அந்த வரி விதிப்பு எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ், ஜிஎஸ்டி வரி நடைமுறையில் இருக்கும் குறைபாடுகளை அகற்றி, எளிமையான, தெளிவான ஜிஎஸ்டி வரி கொண்டு வரப்படும் என உறுதியளித்துள்ளது. 

வழக்கமான பொருட்களுக்கு ஒரு அளவிலான வரியும், சமூகத்திற்கு நேர்மறையான வகையில் பயன் தராத மது, புகையிலை போன்ற பொருட்களுக்கு சிறப்பு வரியும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் நாடு முழுவதும் ஒரே வரி என்ற ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என பொருளாதார நிபுணர் ஷ்யாம் சேகர் தெரிவித்துள்ளார். 

ஆனால் இந்த திட்டம் சாத்தியமே என பொருளாதார நிபுணரான ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒரே அளவில் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால், இந்தத் திட்டம் சாத்தியம் தான். காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே என்று தெரிவித்துள்ளார்.

(பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்)

ஜிஎஸ்டி வரி நடைமுறைகள் குறித்து பொருளாதார நிபுணர்கள் இருவேறு கருத்துகள் தெரிவித்தாலும், நாள்தோறும் மாற்றம் பெறும் பெட்ரோல், டீசல் வரியை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப் போவதாக காங்கிரஸ் அறிவித்திருப்பது புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.