வணிகம்

சிமெண்ட் தொழில் இருந்து விலகுகிறதா ஏசிசி & அம்புஜா?

webteam

ஹோல்சிம் குழுமத்தின் ஏசிசி மற்றும் அம்புஜா ஆகிய இரு நிறுவனங்கள் சிமெண்ட் தொழில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் சிமெண்ட் உற்பத்திக்கு முக்கியமான நிறுவனம் ஹோல்சிம் ( Holcim ). இந்த குழுமத்திடம் இந்தியாவில் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி ஆகிய இரு நிறுவனங்கள் உள்ளன. சர்வதேச அளவில் முக்கியமில்லாத சந்தைகளில் இருந்து வெளியேற இந்த குழுமம் முடிவெடுத்திருக்கிறது. அதனால் இந்த இரு நிறுவனங்களை விற்க ஹோல்சிம் குழுமம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஜேஎஸ்டபிள்யூ மற்றும் அதானி ஆகிய இரு நிறுவனங்களும் சமீபத்தில் சிமெண்ட் தொழிலில் களம் இறங்கின. இந்த இரு நிறுவனங்களும் பெரிய திட்டங்களை வைத்திருப்பதால் இந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஸ்விஸ் நாட்டை சேர்ந்தது ஹோல்சிம் குழுமம். இந்த நிறுவனம் 2015-ம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த லபார்ஜ் நிறுவனத்துடன் இணைந்து பெரிய குழுமமாக மாறியது. சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாக செயல்பட்டுவருகிறது. ஆனால் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக மறுசீரமைப்பு செய்வதால் முக்கியமில்லாத சந்தையில் இருந்து வெளியேற திட்டமிட்டிருக்கிறது. பிரேசில் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்து இந்த குழுமம் வெளியேறி இருக்கிறது.

ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த அல்ட்ராடெக் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய (11.7 கோடி டன்) சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாகும். இதனைத்தொடர்ந்து ஏசிசி மற்றும் அம்புஜா ஆகிய இரண்டும் சேர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து 6.6 கோடி டன் அளவுக்கு உற்பத்தி செய்கின்றன. இந்தியாவின் மொத்த ஆண்டு உற்பத்தி 54 கோடி டன் ஆகும். சிமெண்ட் உற்பத்தி புதன் கிழமை வர்த்தகத்தின் முடிவில் இந்த இரு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.14 லட்சம் கோடியாக இருக்கிறது.

ஆனால் இவை அனைத்தும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை என்னும் அளவிலே இருக்கிறது. இந்த யூகம் காரணமாக அம்புஜா சிமெண்ட் பங்கு கடந்த ஒரு மாதத்தில் 20 சதவீதம் என்னும் அளவில் உயர்ந்திருக்கிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பை எந்த நிறுவனமும் வெளியிடவில்லை.