வணிகம்

தொடர்ந்து இறங்குமுகத்தில் ஐஆர்சிடிசி பங்கின் விலை! காரணம் என்ன?

EllusamyKarthik

இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் பங்குகளின் விலை தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது. இன்று காலை தேசிய பங்கு வர்த்தகம் தொடங்கிய போது ஐஆர்சிடிசி பங்கின் விலை 4,909 ரூபாய் மற்றும் 40 பைசா. அதுவே வர்த்தகம் நிறைவடையும்போது 4,419 ரூபாய். முன்னதாக வரலாறு காணாத உச்சத்தை செவ்வாய்க்கிழமை அன்று எட்டியிருந்தது ஐஆர்சிடிசி பங்குகள். ஒரு பங்கின் விலை 6396 ரூபாய் வரை எட்டியிருந்தது. அந்த நிலையில் தான் இந்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

காரணம் என்ன?

முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஐஆர்சிடிசி பங்குகளை லாப நோக்கத்தில் விற்பனை செய்தது பங்கு விலை வீழ்ச்சிக்கு முதல் காரணம் என சொல்லப்படுகிறது. புதன் அன்று மட்டும் 19.06 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஐஆர்சிடிசி பங்கு விலை. கடந்த ஐந்து நாட்களில் 9.14 சதவிகிதம் வீழ்ச்சி. மறுபக்கம் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20 வரையிலான நாட்களில் 21.81 சதவிகிதம் பங்கு விலை உயர்ந்துள்ளது. 

இது கடந்த ஆறு மாதத்தில் 163.89 சதவிகிதமாகவும், இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரையிலான தேதியில் 205.54 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. ஜனவரி 1, 2021 அன்று ஐஆர்சிடிசி பங்கின் விலை 1,445 ரூபாய் மட்டுமே. 

இப்போது ஐஆர்சிடிசி பங்குகளை வாங்குவது சரியாக இருக்குமா?

ஐஆர்சிடிசி பங்குகளின் விலை அடுத்தடுத்த நாட்களில் மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புகள் உள்ளன. சுமார் 4000 முதல் 3800 ரூபாய் வரையில் பங்கின் விலை சரிவு கண்டிருந்தால், பங்குகளை வாங்குவது சரியானதாக இருக்கும். ஏனெனில் அதன் அடித்தளம் வலுவாகவே உள்ளது. பங்கின் விலை கவலையை கொடுத்தாலும் 4000 - 3800 ரூபாய்க்குள் விலை இருந்தால் தாராளமாக முதலீடு செய்யலாம் என ஸ்வஸ்திகா முதலீட்டு ஆய்வு தலைவர் சந்தோஷ் மீனா தெரிவித்துள்ளார்.