ஏடிஎம், இந்தியா போஸ்ட் வங்கிச் சேவை மற்றும் NACH எனப்படும் சுயவிவர பதிவு ஆகியவற்றில் மத்திய நிதி அமைச்சகம் செய்த மாற்றம் இன்று அமலுக்கு வருகிறது.
வங்கிகள் இடையே ஏடிஎம் பயன்பாட்டுச் செலவு அதிகரித்து வருவதால், பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதன்படி, கணக்கு வைக்காத வங்கி ஏடிஎம்மில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கு வங்கிகளுக்கு இடையேயான கட்டணம் 15 ரூபாயில் இருந்து 17 ஆக உயர்கிறது. கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளை தவிர்த்து அதே வங்கியின் பிற கிளைகளில் மேற்கொள்ளும் நிதியில்லாத பரிவர்த்தனைக்கு கட்டணம் 5 ரூபாயில் இருந்து 6 ஆக உயர்கிறது.
கட்டணமின்றி அனுமதிக்கப்படும் ஏடிஎம் பரிவர்த்தனைக்கு மேலாக பயன்படுத்தினால் வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படும் 20 ரூபாய் பரிவர்த்தனை கட்டணத்தில் இப்போது மாற்றமில்லை. எனினும், இது வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் 21 ரூபாயாக உயரவுள்ளது. அதேபோல, தபால் துறை வீடு தேடி அளிக்கும் வங்கிச் சேவைகளுக்கு இன்று முதல் சேவைக் கட்டணம் அமலாகிறது. பரிவர்த்தனை மதிப்புக்கேற்ப இதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.