வணிகம்

35,000 பட்டதாரிகளை வேலைக்கு எடுக்க இன்ஃபோசிஸ் திட்டம்

நிவேதா ஜெகராஜா

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐ.டி நிறுவனமான இன்ஃபோசிஸ், நடப்பு நிதி ஆண்டில் 35,000 பட்டதாரிகளை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறது.

ஒருபுறம் தேவை உயர்ந்து வருகிறது. அதேசமயத்தில் வேலையில் இருந்து வெளியேறுவோர் உயர்வதால் பணியாளர்களுகான தேவை உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் வெளியேறுவோர் விகிதம் 13.9 சதவீதமாக இருக்கிறது. மார்ச் காலாண்டில் 10.9 சதவீதமாக இருந்தது.

இந்த தேவையை ஈடுகட்ட கல்லூரிகளில் முடித்த மாணவர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பிரவீண் ராவ் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் புதிய பணியாளர் சேர்க்கை இருக்கும் என இன்ஃபோசிஸ் தெரிவித்திருக்கிறது.

"பணியாளர்களுடன் தொடர்ந்து உரையாடுவது என்பது முக்கியமானது. அவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் இருக்கிறோம். இது தவிர பணியில் அடுத்த கட்ட வாய்ப்பு மற்றும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் இன்ஃபோசிஸ் வழங்கி வருகிறது.

கடந்த நிதி ஆண்டில் 21,000 புதிய வேலைவாய்ப்புகளை இன்ஃபோசிஸ் வழங்கி இருக்கிறது. ஜூன் காலாண்டில் மட்டும் 8300 நபர்களுக்கு வேலை வழங்கி இருக்கிறது. தற்போதைய நிலையில் 2.67 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் பெண் பணியாளர்களின் பங்கு 38.6 சதவீதமாக இருக்கிறது.

ஜூன் காலாண்டு முடிவுகள் ஜூலை 14-ம் தேதி வெளியானது. இதில் நிகர லாபம் 22.7 சதவீதம் உயர்ந்து (கடந்த ஆண்டில் இதே காலத்துடன் ஒப்பிடும்போது) ரூ.5,195 கோடியாக இருக்கிறது. வருமானமும் 17.9 சதவீதம் உயர்ந்து ரூ.27,986 கோடியாக இருக்கிறது" என்று இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.